×

ஆவடி பகுதியில் அவலம் கழிவு நீர் கால்வாயில் பாதுகாப்பின்றி பணியாற்றும் தொழிலாளர்கள்: வீடியோ வைரலானதால் பரபரப்பு

* ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆவடி: ஆவடியில் முழங்கால் அளவு கழிவு நீர் கால்வாயில் தொழிலாளர்கள் இறங்கி கழிவுகளை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆவடி மாநகராட்சி அருகில் சிறிய கால்வாய் மார்க்கெட் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வழியாக வந்து பிரதான கால்வாயில் கலந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை கடந்து ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாயில் வீட்டு கழிவு நீரும் செல்கிறது. இந்நிலையில், இந்த கால்வாய் முழுவதும் சகதிகள் நிரம்பி கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டது. அதனால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி சகதியாக மாறியுள்ளது.

இதனால், ஆவடி மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கு 30 அடி அகலம் உள்ள 50 மீட்டருக்கு நீளம் கொண்ட கால்வாய், தூர் வார பத்ரகாளி காண்ட்ராக்டர் ஒப்பந்தம் பெற்று, தற்காலிக பணியாளர்களை வைத்து கடந்த 4ம் தேதி முதல் கழிவுகளை அன்னகூடையின் மூலம் அகற்றும் பணி செய்து வருகின்றனர். இதில், அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாயில் மனிதர்களை இறக்கி கழிவுகளை அகற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது. சென்னை மணலியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து இடுப்பளவு உள்ள கழிவுகளில் இறக்கி கூடைகளில் அள்ளி கொட்டும் வேலையில் ஈடுப்படுத்தினர். இதில் அந்த பணியாளர்கள் முழங்கால் அளவு கழிவுநீர், கழிவுநீர் சகதியில் நின்றபடி, கையுறை, காலனி, முக கவசம் ஏதும் இன்றி பணி புரிந்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில், பணி முடிந்து செல்லும் அப்பணியாளர்கள் தங்கள் கை, கால்கள், உடைகளை அங்கு வழிந்தோடும் கழிவு நீரிலே கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது. எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, நவீன உபகரணங்கள் இருக்கும் நிலையில், மனிதர்களை வேலையில் ஈடுப்படுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டன் கணக்கில் இருக்கும் கழிவுகளை, சகதிகளை அண்ணக்கூடையில் அள்ளி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. எனவே, இதில் தொடர்புடைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஆவடி பகுதியில் அவலம் கழிவு நீர் கால்வாயில் பாதுகாப்பின்றி பணியாற்றும் தொழிலாளர்கள்: வீடியோ வைரலானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Avalam ,Avadi ,Aavadi ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...