×

பொது இடங்களில் இருக்கும் அழகான பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து டெலிகிராம் குழுவில் வாலிபர்களுக்கு விற்கும் கும்பல்

* ஆண் நண்பருக்கு புகைப்படம் ரூ.50க்கு விற்கப்பட்டதால் அதிர்ச்சி
* பாதிக்கப்பட்ட பெண் சைபர் க்ரைம் பிரிவில் பரபரப்பு புகார்

சென்னை: கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளம் பெண்கள் மற்றும் திருமணமான அழகான இளம் பெண்களை மர்ம கும்பல் ஒன்று குறிவைத்தது. அதாவது அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அதை டெலிகிராம், இன்ஸ்டாகிராம் குழுக்களில் புகைப்படங்களை வாலிபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அழகான இளம் பெண்கள் புகைப்படம் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வேண்டுமா என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை விரும்பும் இளைஞர்கள் மற்றும் முதியோர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்கிறார்கள். அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள், தங்களுடைய டெலிகிராம் முகவரி கொடுத்து அதில் இணைய சொல்கிறார்கள். அதன்படி இணையும் நபர்களுக்கு கல்லூரி மாணவிகள், திருமணமாகாத இளம் பெண்கள், திருமணமான அழகான பெண்களின் புகைப்படங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்து தெரிவிக்கின்றனர்.

பிறகு புகைப்படம் தேவைப்படுவோர், ஒரு புகைப்படத்துக்கு அதாவது, ஆபாசம் மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்களுக்கு என தனித்தனியாக கட்டணம் செலுத்தி தங்களுக்கு தேவையான புகைப்படங்களை ஜிபே, போன்பே மூலம் மர்ம நபர்களுக்கு பணத்தை செலுத்தி புகைப்படத்தை பெறுகின்றனர். இந்த கலாசாரம் தற்போது சென்னையிலும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது. அந்த வகையில் தான் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் ஆபாசமான புகைப்படம், அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யத சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சைபர் க்ரைம் பிரிவில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது புகைப்படத்தை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் ஆபாசமாக எடுத்துள்ளனர். இதற்கிடையே புகார் அளித்த இளம் பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர், டெலிகிராம் செயலியில் உள்ள குழுவில் இணைந்துள்ளார். அப்போது, தனக்கு அழகான இளம் பெண்களின் புகைப்படங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த குழுவில் உள்ள வடமாநில நபர்கள் ஒரு புகைப்படத்திற்கு ரூ.50 தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி பணத்தை ஜிபே மூலம் செலுத்தி தனக்கு தேவையான இளம் பெண்களின் புகைப்படத்தை பெற்றுள்ளார். பிறகு அந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்த போது, அதில், தனது தோழியின் புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த நபர், தனது தோழியிடம் புகைப்படம் குறித்து கேட்ட போது, அவருக்கு நான் யாருக்கும் புகைப்படம் அனுப்பவில்லை, அப்படி இருக்க என்னுடைய புகைப்படம் எப்படி உனக்கு வந்தது என்று கேட்டு அதிர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் தன் அனுமதியின்றி பொது இடங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்த நபர்கள் மீதும், தனது புகைப்படத்தை விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதுபோன்று பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக போட்டோக்கள், வீடியோக்கள் எடுக்கும் கும்பல் யார் என்பது குறித்தும் டெலிகிராம் குழுவில் அட்மின் மற்றும் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் பொது இடங்களான வணிக வளாகம், திரையரங்குகள், பூங்காக்கள், கோயில், கடற்கரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது, சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை தெரிவித்துள்ளனர்.

The post பொது இடங்களில் இருக்கும் அழகான பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து டெலிகிராம் குழுவில் வாலிபர்களுக்கு விற்கும் கும்பல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து...