×

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் அமைச்சர் ரகுபதியின் கடிதத்துக்கு ஆளுநர் விளக்கம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் ரவி வழங்கவில்லை. மேலும் ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகவும், இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும், வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும் மசோதாக்களுக்கான ஒப்புதல் தொடர்பாக நேற்று முன்தினம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் அமைச்சர் ரகுபதியின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய மனுக்களை ஆளுநர் மாளிகை நிலுவையில் வைத்துள்ளதாகவும் மாநில சட்டத்துறை அமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மை நிலை என்னவென்றால் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து, தற்போது அவை சட்ட ஆய்வில் உள்ளது. கே.சி.வீரமணி மீதான லஞ்சஒழிப்புத்துறை வழக்கை பொறுத்தவரை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக மாநில அரசு தரப்பில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எந்த கோரிக்கையும் மாநில அரசிடம் இருந்து வரவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் அமைச்சர் ரகுபதியின் கடிதத்துக்கு ஆளுநர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Governor ,minister ,Raghupathi ,AIADMK ,Chennai ,ministers ,C. Vijayabaskar ,P.V.Ramana ,K.C. Veeramani ,MR.Vijayabaskar ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...