×

கடவூர் அருகே எடையபட்டி கீழ்பாகம் கொண்டப்பநாயக்கனூரில் மாடு மாலை தாண்டும் திருவிழா

தோகைமலை : கடவூர் அருகே எடையப்பட்டி கீழ் பாகம் கொண்டப்பநாயக்கனூரில் நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் கரூர் மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசை தட்டிச்சென்றது.கரூர் மாவட்டம் கடவூர் அருகே எடையப்பட்டி கீழ் பாகம் கொண்டப்பநாயக்கனூரில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு முள்ளிப்பாடி மந்தையில் பாப்பகம்மாள் மற்றும் எருதுகுட்டை என்ற கோயில் அமைந்து உள்ளது. முதன் முதலாக மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கப்பட்டது. முதல் நாள் திருவிழாவில் பாப்பகம்மாள் சாமிக்கு தாரை தப்பட்டை உருமி மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

2ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. எல்லைக் கோட்டிற்கு எதிரே உள்ள எல்லைசாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை துவக்கி வைத்தனர். அங்கிருந்து முள்ளிப்பாடி மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 300க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது.

இதில் கரூர் மாவட்டம் ஆர்டிமலை ஊராட்சி வாலியம்பட்டி கோனதாதா நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. 2வது திருச்சி மாவட்டம் மாங்கரைப்பட்டி ஐந்து மந்தை விரிகெஜ்சல் நாயக்கர் மந்தை மாடு வெற்றி பெற்றது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை முதலாவதாக ஓடி வந்த சலை எருது மாடு மீது தூவி வரவேற்று எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் எருதுகுட்டை கோயிலுக்கு அழைத்து வந்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 3ம் நாள் நேற்று எருதுகுட்டை சாமிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கடவூர் அருகே எடையபட்டி கீழ்பாகம் கொண்டப்பநாயக்கனூரில் மாடு மாலை தாண்டும் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Madu Mala Tandum festival ,Kondapanayakanur ,Kadavur ,Thokaimalai ,garland festival ,Kadavur, Karur district ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35ஆயிரம் மலர் செடிகள் பராமரிப்பு பணி தீவிரம்