×

கீழ்பவானியில் சீரமைப்பு பணிகள் தாமதம் அட்டவணைப்படி தண்ணீர் திறப்பதில் சிக்கல்

 

ஈரோடு, ஜூலை 6: கீழ்பவானியில் சீரமைப்பு பணிகள் தாமதமாகி வருவதால் அட்டவணைப்படி தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்கள், பழுதடைந்த பகுதிகளில் ரூ.710 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ளதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் அதே வேளையில் சீரமைப்பு பணிகள் தாமதமாகி வருவதால் அட்டவணைப்படி ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஜல்லி, கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமான பணிகளின் முக்கிய மூலப்பொருளான ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பணிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லி கிரசர் உரிமையாளர்களிடம் அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே அரசு பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஜல்லிகளை பெற்று பணிகளை வேகப்படுத்தினால் மட்டுமே வாய்க்கால் சீரமைப்பு பணிகளை திட்டமிட்டபடி முடித்து, அட்டவணைப்படி தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக ஜல்லி கிரசர் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முன்னுரிமை அடிப்படையில் வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கீழ்பவானியில் சீரமைப்பு பணிகள் தாமதம் அட்டவணைப்படி தண்ணீர் திறப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Kilibhavani ,Erode ,Kilibawani ,Dinakaran ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு