×

ராஜாக்கமங்கலம் குழந்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை அடிப்படை வசதிகளும் இல்லை

ராஜாக்கமங்கலம், ஜூலை 6: ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதோடு அடிப்படை வசதிகள் இன்றி பணியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் கீழ் மட்டும் சுமார் 128 மையங்கள் உள்ளன. இதில் ஒரு உதவியாளர் மற்றும் ஒரு அலுவலர் இருப்பர். இவர்கள் பிறப்பு இறப்பு கணக்கெடுத்தல் கர்ப்பிணி பெண்களை கவனித்தல் ,ஊட்டச்சத்து வழங்குதல் ,குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குதல் உட்பட பல பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 128 மையங்களில் சுமார் 30 மையங்களில் உதவியாளர் இன்றி மைய அலுவலர்கள் பரிதவித்து வருதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின்னர் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் வந்து அங்குள்ள அதிகாரிகளுடன் செய்த பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்து மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிப்பர்.

இவ்வாறு பணியாளர்கள் வரும்போது அவர்கள் நிற்பதற்கு கூட இடம் இன்றி சுகாதாரமற்ற தரையில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த அலுவலகத்தில் போதிய மின்விசிறி மற்றும் மேஜை நாற்காலி போன்ற வசதிகள் எதுவும் இல்லை. இதனால் அங்குள்ள அதிகாரிகள் மட்டும் சேரில் உட்கார்ந்து மற்ற பணியாளர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து பணியாற்றும் பரிதாபமான நிலை உள்ளது. இந்த கட்டிடமும் எந்தவித பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் கூறி வருகின்றனர்.

The post ராஜாக்கமங்கலம் குழந்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை அடிப்படை வசதிகளும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam ,Rajakamangalam Union ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்த நாள் விழா