×

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து 12 ஆண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது

அம்பத்தூர் : நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு 12 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (47). இவர் மீது வழிப்பறி, கூட்டுக் கொள்ளை, ஷட்டர் உடைப்பு, செயின் பறிப்பு என பல்வேறு குற்ற வழக்குகள் அம்பத்தூர், கொரட்டூர், ராஜமங்கலம், வில்லிவாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், கடந்த 2011 ஆண்டு முதல் காவல் நிலையங்களிலும், நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணிக்கு கொள்ளையன் தங்கம், வில்லிவாக்கம் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. உடனே, தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு நேற்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் கடந்த 2015ம் ஆண்டு பெருங்குடி எம்.ஜி.ஆர். சாலையில் கத்தியைக் காட்டி மிரட்டி ஒருவர் பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசஷ் (29) என்பவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த வெங்கடேஷ், வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகி விட்டார். இதையடுத்து வெங்கடேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் வெங்கடேஷை பெருங்குடியில் நேற்று கைது செய்தனர். பிறகு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து 12 ஆண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Dimici ,Ambathur ,
× RELATED சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட...