செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை சிப்காட் பகுதியில், தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த கார்களுக்கான டாஷ் போர்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் உதவி மேலாளராக மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கனரக லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், லாரிகளில் ஏற்றப்படும் கார் உதிரிபாகங்களை சண்முகசுந்தரம் குறைவாக கணக்கு காட்டி வெளிச்சந்தையில் விற்று வந்துள்ளார். இது வருடாந்திர கணக்கை சரிபார்க்கும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் அமித்கோஸ்வாமி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்தியதில் நிறுவனத்தின் உதவி மேலாளர் சண்முக சுந்தரம் ரூ.16 லட்சம் மதிப்பிலான கார் உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் சண்முகசுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் பொருட்களை திருடிய உதவி மேலாளர் கைது appeared first on Dinakaran.