×

ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் கிரானைட் தூண் கண்டுபிடிப்பு

* சோழர் கால கட்டிடங்களும் தென்பட்டது

ஜெயங்கொண்டம்: மாளிகைமேட்டை அடுத்து உட்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணியின்போது கிரானைட் தூண் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2020-21 ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாளொன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி, கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியதையடுத்து கடந்த 2022ம் மார்ச்11-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இரண்டாம் கட்டஅகழாய்வின்போது சோழர் காலத்து கட்டிடங்கள், பழங்கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. பழங்கால பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணி கடந்த ஏப்ரல் 6ம் தேதி துவங்கப்பட்டது. கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு முதற்கட்ட அகழாய்வுப் பணிகளில் மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 17 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் மொத்தம் 1003 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இரண்டாம்கட்ட அகழாய்வில் மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வானது செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்விற்கு ரூ30 இலட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக 315செமீ நீளமும், 45 செமீ அகலமும் உள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணியில் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டிற்கு அருகிலுள்ள உட்கோட்டை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே கடந்த ஜூன் 22ம் தேதி துவங்கியது. தற்போது மேற்கொண்ட அகழாய்வு பணியின் போது நீண்ட கிரானைட் கல் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அகழாய்வு செய்யும்போது நீளத்தினை கண்டறிய இயலும். தற்போது வரை 6.40 மீட்டர் நீளமும் தோண்டப்பட்டுள்ளது. இதில் 72 செ.மீ அகலமும் 76 செமீ அகலமும் கொண்டுள்ளது. நீளத்தில் 6.40 மீட்டர் தோண்டப்பட்ட வரை நீளம் தெரிந்துள்ளது. தொடர்ந்து தோண்டும்போது இதனுடைய முழு நீளமும் தெரியவரும். இந்த தூணானது படுக்கவாட்டில் கிடப்பதால் உடைந்திருக்கலாம் அல்லது சாய்ந்து இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் அகழ்வாய்வு பணியை தொடரும் போது தான் முழு விபரமும் தெரியக்கூடும்.

இந்த கல்தூணானது மாளிகையின் தென்பகுதி கோட்டை வாசலாக இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாளொன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழ்வாராய்ச்சி பணி தொடங்கி, கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது.

The post ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் கிரானைட் தூண் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Utkotai ,Jayangkondam ,Chola ,Jayangondam ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED சித்திரை மாதத்தில் பிறந்ததால்...