×

நாகர்கோவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழை: சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் காலை முதலே வீசி வரும் சூறைக்காற்று காரணமாக இருளப்பபுரம் பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் அகற்றினர்.

நடப்பாண்டிற்கான தென்மேற்கு பருவமழை கேரள மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளா மாவட்டத்தை ஒட்டியுள்ள குமாரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாகர்கோவில், இருளாக்குடி, வடசேரி, சுசீந்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் மழையும் பெய்து வருகிறது.

இதனிடையே அதிக காற்று காரணமாக இருளப்பபுரம் பகுதியில் மரம் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரம் முறிந்து விழுந்த தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், மரத்தை இயந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

இதே போல நாகர்கோவிலின் பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக தென்னை மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பலத்த காற்றால் சேதமடைந்த மின் கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post நாகர்கோவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழை: சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,KANYAKUMARI ,Darkappuram ,Nagarko Region ,Dinakaran ,
× RELATED சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:...