×

கொச்சி விமான நிலையத்தில் ஆசனவாய்க்குள் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்: ஆசாமி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கொச்சி, கோழிக்கோடு. கண்ணூர் ஆகிய சர்வதேச விமானநிலையங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து கொச்சி வந்த பாலக்காட்டை சேர்ந்த 2 பயணிகளிடம் நடத்திய சோதனையில் அவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் உள்ளாடைக்குள் 1.128 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் சோதனையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு மலேசியாவில் இருந்து கொச்சி வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த பயணி தன்னுடைய உள்ளாடைக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் தங்கத்தை பசை வடிவிலாக்கி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரது உள்ளாடைக்குள் இருந்து 521 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

ஆனாலும் அவர் மேலும் தங்கத்தை மறைத்து வைத்திருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் ஆசன வாய்க்குள்ளும் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தங்கத்தை வெளியே எடுத்தனர். அந்த நபர் 505 கிராம் தங்கத்தை கேப்சூல் வடிவிலாக்கி ஆசன வாய்க்குள் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில் அவர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷிபில் என்பது தெரியவந்தது. அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post கொச்சி விமான நிலையத்தில் ஆசனவாய்க்குள் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்: ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Assami ,Kochi airport ,Thiruvananthapuram ,Kochi ,Kerala, Kozhikode ,Kannur ,Asami ,Dinakaran ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...