×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை: சேர்வலாறு, ராமநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்வு

நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்தது. தென்காசி மாவட்டத்திலும் நல்ல சாரல் மழை காணப்படுகிறது. சேர்வலாறு, ராமநதியின் அணை நீர்மட்டங்கள் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளன. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகம் இருப்பதால், அதை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் சீசன் இரு தினங்களாக களைக்கட்டி வருகிறது. எப்போதும் ஜில்லென குளிர்ந்த காற்றும், இதமான சாரலும் இரு மாவட்டங்களிலும் காணப்படுகிறது. அடிக்கடி குளிர்காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே லேசான சாரலும், இதமான குளிரும் தென்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தொடர்ந்து காணப்படுவதால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் சற்று உயர தொடங்கியுள்ளது. பாபநாசம் அணையில் நேற்று காலையில் நீர் இருப்பு 40 அடியாக இருந்த நிலையில், இன்று 4 அடி உயர்ந்து 44.20 அடியாக உயர்ந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக உள்ளது. இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக மாறியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் அப்படியே மாறாமல் 45.35 அடியாக உள்ளது. தென்காசி மாவட்டத்திலும் சாரல் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் இன்று உயர்ந்து காணப்படுகிறது. ராமநதியின் நீர்மட்டம் நேற்று 25 அடியாக இருந்த நிலையில், இன்று 8 அடி உயர்ந்து 33 அடியாக மாறியது. கடனா நதி அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 32 அடியாகவும் உயர்ந்தது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில் இன்று 49 அடியாக இன்று காலை உயர்ந்து காணப்பட்டது. அணைப்பகுதிகளில் நேற்று தொடங்கி இன்று காலை வரை ஓரளவுக்கு சாரல் மழையும் தென்பட்டது. சேர்வலாறில் 7 மிமீ மழையும், மணிமுத்தாறில் 11.6 மிமீ மழையும், கன்னடியன் அணைப்பகுதியில் 12.8மிமீ, அம்பாசமுத்திரத்தில் 11 மிமீ, களக்காட்டில் 1 மிமீ மழையும் பெய்திருந்தது. தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் 6 மிமீ, செங்கோட்டையில் 29.8 மிமீ, ஆய்குடியில் 6, கடனா நதியில் 12 மிமீ, கருப்பாநதியில் 10 மிமீ, குண்டாறில் 44 மிமீ மழையும் பெய்தது. குற்றால அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லாவிட்டாலும் மேகமூட்டம் காணப்பட்டது.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை: சேர்வலாறு, ராமநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Chervalar ,Ramanadi dam ,Nellai ,Papanasam dam ,Ramanadi ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...