×

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட வேலையால் குண்டும், குழியுமான சாலைகள் புதுப்பொலிவு பெறுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர்:விருதுநகர் மாவட்ட தலைநகருக்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில், நகரில் ஆக்கிரமிப்பாளர்களால் அனைத்து சாலைகளும் குறுகிய சாலைகளாக உள்ளன. பாதசாரிகளுக்கான நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் நடுரோட்டில் நடந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகரில் 2007 பாதாளசாக்கடை பணிகள் துவங்கியது. பாதாளசாக்கடை பணிகள் இன்று வரை முழுமை பெறவில்லை. பாதாளச்சாக்கடைக்கு தோண்டிய சாலைகள் அனைத்தும் பகுதி, பகுதியாக போடப்பட்டு 2020ல் அனைத்து சாலைகளும் முழு வடிவம் பெற்றது.

கடந்த 3 ஆண்டுகளாக சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில் நகரில் புல்லாலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே பீடர் ரோடுகள் குண்டும், குழியுமாகி விட்டன. தற்போது நகரில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி துவங்கி உள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை சாலையோரத்தில் பதிக்காமல் சாலைகளை சேதப்படுத்தி இரவு நேரங்களில் ஒப்பந்தகாரர்கள் பதித்து வருகின்றனர்.

நகரில் ராமமூர்த்தி ரோட்டில் இருந்து மதுரை ரோடு செல்லும் வாகனங்களில் 90 சத வாகனங்கள் தரமான சாலையாக இருப்பதால் வருமானவரித்துறை அலுவலகம், பிஎஸ்என்எல், ஸ்டேட் பேங்க் வழியாக மதுரை ரோடு செல்கின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை பதிக்கும் பணியில் சாலையோரத்தில் இடம் இருந்தும் நல்ல நிலையில் இருந்த சாலைகளை தோண்டி பதிக்கின்றனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் மாறி வருகிறது. குழாய் பாதிக்கும் அளவிற்கு சாலையோரத்தில் இருக்கம் இடத்தில் தோண்டாமல் சாலையை சேதப்படுத்தி பெரிய அளவிலான குழியாக தோண்டி பதிக்கின்றனர். மேலும், இரவில் தோண்டுவதால் வீடுகளின் குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தி செல்கின்றனர்.

குடிநீர் குழாய் பதிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், தோண்டிய சாலைகளில் ஒட்டுவேலைகளை செய்ய வேண்டுமென ஒப்பந்தத்தில் உள்ள நிலையில், ஒட்டுவேலைகளையும் பார்க்காமல் விடுவதால் சாலைகள் தரமற்ற சாலைகளாக மாறி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தோண்டிய சாலைகள் அனைத்திலும் ஒட்டுவேலைகளை பார்க்க உத்தரவிட்டு, போக்குவரத்திற்கு உகந்த சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் விசாலமான சாலைகள் நகரின் எந்த பகுதியிலும் இல்லாமல், குறுகிய நகரமைப்பை உடையது. மெயின்பஜார் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது. தற்போதுள்ள, மெயின்பஜார் வழியாக நகரின் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. நகரின் ஒட்டுமொத்த வணிகம் இந்த சாலையில் நடப்பதாலும், ஆக்கிரமிப்புகளாலும், நான்குவழிச்சாலை நடைமுறையின் போது நகருக்கு வெளிபுறமாக சாலை அமைக்கப்பட்டது. நகரில் கடந்த 12 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் முறைப்படி அகற்றப்படாததால் மெயின்பஜார், காசுக்கடை பஜார், வடக்கு, தெற்கு ரதவீதிகள், பழைய பஸ் நிலைய சுற்றுச்சாலை, புல்லலக்கோட்டை ரோடு, சர்ச் எதிர்புற சாலை, கச்சேரி ரோடு, ரயில்வே பீடர் ரோடு என அனைத்து சாலைகளிலும் பொதுமக்களுக்கான நடைபாதைகளை கடையினர் முழுமையாக ஆக்கிரமித்து விட்டனர்.

மெயின்பஜார் வழியாக சாத்தூர், அருப்புக்கோட்டை பஸ்கள் இயக்கப்பட்ட போது விருதுநகர் மெயின்பஜாரில் ஆக்கிரமிப்புகள் குறைவாகவும், வாகனங்கள் பஸ்கள் வரும் என்ற பயத்தில் ஓரமாகவும் நிறுத்தி எடுக்கப்பட்டன. பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். வேன்கள், லாரிகள், டிரை சைக்கிள்கள் என ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு நிறுத்தப்படுவதால் மெயின்பஜாரில் நடந்து செல்லக்கூட தடுமாறும் நிலை ஏற்பட்டு விட்டது.

The post தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட வேலையால் குண்டும், குழியுமான சாலைகள் புதுப்பொலிவு பெறுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Virudnagar district ,Dinakaran ,
× RELATED சிவகாசி தீப்பெட்டி ஆலையில் தீ: ரூ.25...