×

பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தில் 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்: உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் 16 மாவட்ட இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்கான முகாம் நேற்று துவங்கியது. முதற்கட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்தாண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, 17 1/2 வயதிலிருந்தே ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று நான்காண்டுகள் பணியாற்றலாம். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 5ம் தேதி வரை திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே முதற்கட்ட தேர்வில் தேர்வான 3,200 பேருக்கு உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கான முகாம் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு ஏறக்குறைய 800 பேர் வரவழைக்கப்பட்டு 4 நாட்கள் உடற்தகுதி தேர்வுகளும், 5ம் நாளில் மருத்துவ பரிசோதனை தேர்வும் நடத்தப்படுகிறது.

உடற்தகுதி தேர்வு நேற்று அதிகாலை 3மணிக்கு தொடங்கியது. இப்பணிகளை உதவி ராணுவ ஜெனரல் – பிரிகேடியர் எம்எஸ் பாஹி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, திருச்சி மண்டல ராணுவ ஆள் சேர்ப்புப் பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் மைதானத்தில் 1600 மீட்டர் தூரம் ஓடச்செய்து, 5.30 நிமிடத்தில் வருவோர் 60மதிப்பெண்களுடன் முதல் வகுப்பிலும், 5.40 நிமிடத்தில் வருவோர் 48 மதிப்பெண்களுடன் 2ம் வகுப்பிலும் தேர்ச்சிபெற்றதாக கணக்கிடப்பட்டனர். இதில் ஒரு விநாடி தாமதமாக வந்ததால் அவர்களை ராணுவ வீரர்களும், போலீசாரும் சேர்ந்து ரோப் கயிறுகளால் தடுத்து மைதானத்தை விட்டே வெளியேற்றினர்.

வாய்ப்பை இழந்ததால் சிலர் கதறி அழுதனர். முக்கால் வாசி தூரத்தை கடந்து ஓட முடியாமல் கீழே மயங்கி விழுந்தவர்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்று மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். முதல்நாள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 826 பேரில் 726 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட ஓட்ட போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 1600 மீட்டர் தூரத்தை கடந்து 216 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. நீளம்தாண்டுதல் போன்ற உடற்தகுதி தேர்வுகளும் நடத்தப்பட்டன. காலை 9மணிவரை முதல்நாள் தேர்வுகள் நடை பெற்றது. தேர்வுக்கு வந்திருந்தவர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே மைதானத்திற்குள் தங்க வைக்கப்பட்டனர்.

The post பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தில் 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்: உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Army recruitment camp ,Perambalur ,districts ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...