×

பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலைக்கு விழா காலங்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் வருகை தரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தந்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பு ரயில்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் தெற்கு ரயில்வேக்கு கருத்துருக்களை அனுப்பி நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து, அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்திட இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ,50ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து, பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai temple ,Minister ,Shekharbabu ,Chennai ,Tiruvannamalai Arunachaleswarar ,temple ,Shekhar Babu ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...