×

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3585 ஹெக்டேர் அளவிற்கு 24 புதிய காப்பு காடுகள் வனப்பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 1: கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 3585 ஹெக்டேர் அளவிற்கு 24 புதிய காப்பு காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வனப்பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வனத்துறை 3585 ஹெக்டேர்களை அதன் வனப்பரப்பில் உள்ளடக்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2021-23ல் தமிழ்நாடு வனச்சட்டம், 1882ன் பிரிவு 16-ன் கீழ் திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 3585.38.56 ஹெக்டேர் அளவிற்கு 24 புதிய காப்புக் காடுகளாக தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.

காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் உன்னத இலக்கை அடையும் வகையில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 265 கோடி மரங்களை நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தின் புவியியல் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை 33 சதவீதம் ஆக்கும் வகையில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள தரங்குன்றிய வன நிலப்பரப்பு மற்றும் பிற தரங்குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் பொருட்டு 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பல பகுதிகளை ‘காப்புக் காடுகள்’ என்ற பிரிவின் கீழ் காப்புக் காடுகளாக அறிவிக்கை செய்யும் பட்சத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980ன் படி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். வனப் பாதுகாப்புச் சட்டம் 1980ன் பயன்பாடு, அரசுப் பதிவுகளில் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 3585 ஹெக்டேர் அளவிற்கு 24 புதிய காப்பு காடுகள் வனப்பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...