×

கனகசபையில் அதிகாரிகள் வழிபட்ட விவகாரம் தீட்டு என கூறி பூணூல், ஆடைகளை கழற்றிய தீட்சிதர்

 

சிதம்பரம், ஜூலை 1: கனக சபையில் அதிகாரிகள் வழிபட்டதால் தீட்டு எனக்கூறி பூனூல், ஆடைகளை தீட்சிதர் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு கடந்த 24 முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபடக் கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து விளம்பர பலகை வைத்திருந்தனர். இதற்கு பக்தர்கள் மற்றும் கோயில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறையினர் பதாகை வைத்தது அரசாணைக்கு எதிரானது என கடந்த 24ம் தேதி பதாகையை அகற்ற சென்றபோது தீட்சிதர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பலகை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் கோயிலில் கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள் கனக சபையின் கிழக்கு வாசல் வழியாக ஏறி வழிபட்டனர். உடனே தீட்சிதர்கள் கனக சபையை பூட்டிவிட்டு போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில், தீட்சிதர்களின் தடையை மீறி இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனக சபையில் ஏறியுள்ளனர். மேலும் கனக சபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதரை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளிவிட்டனர். இதில் பூணூல் அறுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அப்போது கற்பக கணேச தீட்சிதரின் மனைவி அங்கு வந்து, எப்படி என் வீட்டுக்காரரை கீழே தள்ளி விடலாம், ஜென்ஸ் மேல லேடீஸ் கை வைக்கலாமா, எங்க ஹஸ்பண்டுக்கு உடம்பு முடியாம போச்சுன்னா அவங்க வந்து பார்த்துப்பாங்களா, பூணூலை அறுத்து கீழே பிடித்து தள்ளி இருக்காங்க. லேடீஸ் தொடக்கூடாது என்று வறைமுறை இருக்கு, ஜென்சை லேடீஸ் தொடலாமா, பூஜைகாரரை தீட்சிதர்களே தொட மாட்டார்கள். எப்படி அவங்க எங்க ஹஸ்பண்டை தள்ளிவிட்டாங்க, எவளா இருந்தால் எனக்கு என்ன, இங்க வர சொல்லுங்க, என்று பேசியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கும்போது, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் உடனே கீழே இறங்கிவிட்டனர். தடையை மீறி வழிபட்டதால் தீட்டு எனக் கருதி தீட்சிதர், உடுத்தி இருந்த உடைகள் மற்றும் பூணூலை கழட்டிவிட்டு புது துணி மற்றும் பூனூலை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றார். என்றனர்.

The post கனகசபையில் அதிகாரிகள் வழிபட்ட விவகாரம் தீட்டு என கூறி பூணூல், ஆடைகளை கழற்றிய தீட்சிதர் appeared first on Dinakaran.

Tags : Poonul ,Dikshithar ,Kanakasabha ,Chidambaram ,Kanaka Sabha ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் மீண்டும் பரபரப்பு கனகசபை மீது தரிசனம் செய்ய தடை