×

அத்வானி, ஜோஷி அமைச்சர்களாகதான் சிறையில் இருந்தனர் தனக்கு அதிகாரம் இல்லை என்று 4 மணி நேரத்தில் ஆளுநருக்கு தெரிந்தது: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நெல்லை: ‘அமைச்சரை பதவி நீக்கம் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று 4 மணி நேரத்தில் ஆளுநர் புரிந்து கொண்டார்’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நெல்லை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா பாளை சேவியர் கல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த தமிழக சபாநாயகர் அப்பாவு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் தகுதி, ஆளுநருக்கு இல்லை. இதை 4 மணி நேரத்திற்குள் ஆளுநர் தெரிந்து கொண்டுள்ளார். ராமர் கோயில் இடிப்பு சம்பவ வழக்கில் தொடர்புடைய முன்னாள் ஒன்றிய அமைச்சர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் பதவியுடன் தான் நீதிமன்றத்திற்கு சென்றனர். இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பதவியில் இருந்து கொண்டுதான் வழக்கை சந்தித்தனர்.

அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கலாம். ஆனால் அமைச்சர்களை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அமைச்சர்களுக்கு 2 ஆண்டுக்கு மேல் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பதவியில் இருந்தபோது தண்டனை கிடைத்ததால் தானாகவே அந்த பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் உரிமை, சபாநாயகருக்கு மட்டுமே உண்டு. ராகுல்காந்தி 2 ஆண்டு தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர், பதவி நீக்கம் செய்தார். இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன. ஆளுநரை நான் பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். நேற்று முன்தினம் நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசப்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

* ஆளுநரை திரும்ப பெற்ற வரலாறு தெரியுமா?

சபாநாயகர் கூறுகையில், பாத்திமாபீவி ஆளுநராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாத நபரை (ஜெயலலிதா) பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக அப்போதைய பிரதமர், ஆளுநரை திரும்ப பெறச் செய்தார். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொண்டால் ஆளுநர் தனது பதவிக்கு பெருமை சேர்க்க முடியும்’ என்றார்.

The post அத்வானி, ஜோஷி அமைச்சர்களாகதான் சிறையில் இருந்தனர் தனக்கு அதிகாரம் இல்லை என்று 4 மணி நேரத்தில் ஆளுநருக்கு தெரிந்தது: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Advani ,Joshi ,Speaker ,Appavu ,Nellie ,Governor ,
× RELATED 10 நாள் எம்பிஏ படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி