×

ரூ.19 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: ரூ.19 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலை தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி 1,000 ஆண்டுகளுக்கு மேலான நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்களை பொக்கிஷங்களாக பாதுகாத்திடும் வகையில் புனரமைத்தல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கை நடத்துதல், திருக்குளங்களை பாதுகாத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை பாதுகாத்தல், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தங்கும் அறை, முடி காணிக்கை மண்டபம், விருந்து மண்டபம் போன்றவற்றை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

1,000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2022 -2023ம் ஆண்டு நிதியாண்டில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிக்காக ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கினார். அதனை தொடர்ந்து இந்தாண்டும் ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கி இருக்கின்றார். அப்படி வழங்கப்பட்ட அரசு மானியத்தின் 1,000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக பாலாலயம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் 29 திருப்பணிகளுக்கு அரசு மானியமாக ரூ. 17 கோடியும், திருக்கோயில் நிதியிலிருந்தும் ரூ.2 கோடியும் ஆகமொத்தம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

2022- 2023ம் ஆண்டில் அரசு மானியமாக வழங்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் 46 திருக்கோயில்களின் திருப்பணிகளும், 66 திருக்கோயில்களில் உபயதாரர் நிதியிலிருந்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 2023ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தாண்டு வழங்கப்பட்ட ரூ.100 கோடி அரசு மானியத்தின் மூலம் திருக்கோயிலின் சார்பில் 37 திருக்கோயிலின் திருப்பணிகளும், உபயதாரர் நிதியின் மூலம் 46 திருக்கோயிலின் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களாக 714 திருக்கோயில்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டத்தின்படி வருகின்ற 5 ஆண்டுகளில் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 500 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு புனரமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 714 திருக்கோயில்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் ஆட்சி காலத்தில் தான் பாதுகாக்கப்பட்டது என்று வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 2022-2023 ஆம் ஆண்டில் 70 திருக்கோயில்களில் 123 பணிகள் ரூ.42 கோடி மதிப்பீட்டிலும், 2023 -2024 ஆம் ஆண்டில் 56 திருக்கோயில்களில் 134 பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 788 திருக்கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் வகையில் இதுவரையில் ரூ.4,740 கோடி மதிப்பீட்டில் 5,001 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை வெகு சிறப்பாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் அனைத்து வகையிலும் ஊக்கம் அளித்து கொண்டிருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி நடத்திவரும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் தான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழிபாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சனை இல்லை.

இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும். காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகள் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக இத்திருக்கோயிலுக்கு 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தாங்கள் விரும்பும் திருக்கோயில்களுக்கு ஆன்லைன் மூலமாகவே நன்கொடை அளிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயில் அலுவலகங்களிலும் வழங்கி அதற்குண்டான ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் ரூ.275 கோடி நிலுவையில் இருந்த வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர், திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், கூடுதல் ஆணையர் திருமதி சி. ஹரிப்ரியா, காஞ்சிபுரம் மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திருமதி இரா.வான்மதி, அறங்காவலர் குழு தலைவர் திரு.எம்.எம்.வேல்மோகன், உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) திரு.பொ.இலஷ்மிகாந்தபாரதிதாசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திரு.சு.வரதன், திரு.வ.ஜெகன்நாதன், திரு.விஜயகுமார், திருமதி சு.வசந்தி சுகுமாறன், திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி ப.முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.19 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Kanchipuram Ekambaranatha ,temple ,Chennai ,Kanchipuram Ekambaranatha Temple ,Dinakaran ,
× RELATED அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில்...