×

தமிழ்நாடு முழுவதும் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 3 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடலூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 34 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஒரு புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை செயல்படுத்தும் பொருட்டும், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கத்துடனும் “பெரியார் நினைவு சமத்துவபுரம்” முத்தமிழறிஞர் கலைஞர் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, 1997 – 2001 வரையில் 145 சமத்துவபுரங்கள் மற்றும் 2008-2011 வரையில் 93 சமத்துவபுரங்கள், என மொத்தம் 238 சமத்துவபுரங்களை அமைக்க ஆணையிடப்பட்டு, 233 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 5 சமத்துவபுரங்களில், ஒரு சமத்துவபுரம் பணி முடிக்கப்படாத நிலையிலும், 4 சமத்துவபுரங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாத நிலையிலும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் ஆகிய இரண்டு சமத்துவபுரங்களும் முற்றிலுமாக சீரமைப்பு செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது, மீதமுள்ள மூன்று சமத்துவபுரங்களில், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், இராமசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகளுக்கான சிறுபழுதுகள் நீக்கம் 70.14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இதர உட்கட்டமைப்பு வசதிகளின் சீரமைப்பு பணிகள் 31.01 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 101.15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், தொளார் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 78 வீடுகளுக்கான சிறுபழுதுகள் நீக்கம் 71.44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இதர உட்கட்டமைப்பு வசதிகளின் சீரமைப்பு பணிகள் 26.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 97.94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், காட்டுக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகளுக்கான சிறுபழுதுகள் நீக்கம் 87.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இதர உட்கட்டமைப்பு வசதிகளின் சீரமைப்பு பணிகள் 25.41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 112.81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்காணும் திருவள்ளூர், கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்கள் 3 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, முதலமைச்சரால் இன்றைய தினம் திறந்து வைத்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.
மேலும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்கு மாற்றாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, தற்போது வரை 277 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 211 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம் – ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவிலும், திருப்பூர் மாவட்டம் – காங்கயம் ஒன்றியத்தில் 3 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் – விருதுநகர் ஒன்றியத்தில் 3 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் – அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் – வடமதுரை ஒன்றியத்தில் 3 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடமானது 17,324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலகம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் கிருஷ்ணகிரியில் 8 கோடி ரூபாய் செலவிலும், நாமக்கல்லில் 8 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவிலும், தலா 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடங்கள்.

கடலூர் மாவட்டம் – நல்லூர் ஒன்றியம், வேப்பூர் ஊராட்சியில் 51 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 57,620 சதுர அடி பரப்பளவில்
2 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில், 10 பேருந்துகள் நிறுத்துவதற்கென தனித்தனி பேருந்து நிறுத்தும் தளங்கள், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான தளங்கள், பயணிகள் அமரும் இடம், குடிநீர், மின்விளக்கு வசதிகள், கழிப்பறைகள், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரத்தைக் காட்டும் வரைபலகை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Periyar Memorial Equalities ,Tamil Nadu ,G.K. Stalin ,Chennai ,Mukheri ,Periyar ,Memorial ,Equality Puras ,Aligned Periyar ,Equalities ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள்...