×

எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம் கோர்ட்டின் கடும் விமர்சனத்தால்; ‘நீட்’ முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: புதிய சட்டம் அமல், என்டிஏ தலைவர் நீக்கத்தை தொடர்ந்து திருப்பம்

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம் கோர்ட்டின் தொடர் விமர்சனத்தால் ‘நீட்’ முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது. தேர்வு முறைகேடு தொடர்பான புதிய சட்டம் அமலாகி உள்ள நிலையில், என்டிஏ தலைவரை நீக்கியதை தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிவு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிந்த முறைகேடு தொடர்பாகவும், தேர்வெழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் என்டிஏ (தேசிய தேர்வுகள் முகமை) கூடுதல் மதிப்பெண் வழங்கியதை எதிர்த்தும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும், மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், மோசடியில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைமுறைகளில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து பரிந்துரைகளை வழங்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

இதற்கிடையே நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மனுக்கள் யாவும் வரும் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவரான இவருக்கு, இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போதைய தலைவர் சுபோத்குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் தேசிய தேர்வு முகமை தலைவரை ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யும் அரசுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு ) சட்டம் – 2024 கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் அமலானது. இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘வினாத்தாள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றியிருப்பது கண்துடைப்பு நாடகத்தைப் போன்றது. ஊழல் மற்றும் கல்விக் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை பாதுகாக்கும் பொறுப்பை பாஜக ஒருபோதும் கைவிடாது’ என்று விமர்சித்தார்.

இந்நிலையில் ‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பல மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருவதால், இவ்வழக்கை ஒருங்கிணைத்து விசாரிக்க வசதியாக சிபிஐயிடம் ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், ‘நீட் தேர்வு தொடர்பாக சில மாநிலங்களில் முறைகேடுகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. தேர்வு முறையை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தும் நோக்கில், இவ்விவகாரத்தில் சிபிஐ விரிவான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத்தன்மையை உறுதி செய்யவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பு சம்பந்தப்பட்டிருந்தாலும், கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் அரசுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு ) சட்டம் – 2024 தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையிலும், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், தற்போது ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் லோக்சபா தேர்தல் முடிந்து நாளை நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், எதிர்கட்சிகள் நீட், நெட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கடுமையாக அவையில் எழுப்பும் என்பதால் ஒன்றிய அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

The post எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம் கோர்ட்டின் கடும் விமர்சனத்தால்; ‘நீட்’ முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: புதிய சட்டம் அமல், என்டிஏ தலைவர் நீக்கத்தை தொடர்ந்து திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CBI ,NDA ,NEW DELHI ,EU GOVERNMENT ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை...