×

வாலாஜா அருகே கன்னரத்தேவனால் கட்டப்பட்டது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமநாதேஸ்வரர் கோயில்

* கும்பாபிஷேகம் நடத்தவும் பக்தர்கள் கோரிக்கை
* திருப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும்

 

வாலாஜா : வாலாஜா அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னரத்தேவனால் கட்டப்பட்ட சோமநாதேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமத்தில், பாலாற்றங்கரையில் கி.பி.949ல் தக்கோலத்தில் நடந்த போரில் சோழர்களை தோற்கடித்து தொண்டை மண்டலத்தை வசப்படுத்தி ஆண்ட கன்னரத்தேவனால் கட்டப்பட்ட சோமநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கான இடம் 2 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கிறது. மூலவர் விமானம் தஞ்சை கோபுரத்தை போல் வட்டவடிவ பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும், மகாவிஷ்ணு தெற்கு நோக்கியும் வீற்றிருப்பது தனி சிறப்பாகும். எல்லாவற்றிற்கும் மேலாக விமானத்தில் உள்ள கோபுர கலசம் ஐந்து அடி உயரம் கொண்டது.

இதுமுழுவதும் ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டது. பச்சை கிரானைட் கல்லால் உருவான மூலவர் சோமநாதேஸ்வரர் கம்பீரமாக அமர்ந்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இடிக்கப்பட்ட இந்த கோயில் 200 ஆண்டுகள் பூஜை இல்லாமல் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் கம்பண்ண உடையார் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்ததாகவும், நித்ய பூஜைகள் தடையின்றி நடைபெறுவதற்காக 20 ஏக்கர் விவசாய நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் உண்டு.

ஆனால் நாளடைவில் கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துவிட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80 லட்சம் செலவில் கடந்த 2013ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றது. மூலவர் விமானம் சுவாமி சன்னதி, முன்மண்டபம், திருக்குளம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பூச்சுவேலை, வண்ணம் பூசுதல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்காமல் திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அதேபோல் கோயில் குளமும் தூர்ந்து போயுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேவையான நிதியை ஒதுக்கி உடனடியாக நிலுவையில் உள்ள திருப்பணிகளை முடிப்பதுடன், திருக்குளத்தையும் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post வாலாஜா அருகே கன்னரத்தேவனால் கட்டப்பட்டது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமநாதேஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.

Tags : Somanadeshwara ,Kannaradeva ,Valaja ,Kumbabishekam ,Walaja ,Walaja… ,Somanadeshwarar Temple ,Kannaradevan ,
× RELATED சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது