×

தாமிரபரணி குடிநீர் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: தாமிரபரணி கூட்டுக்குடிநீர் நகர் பகுதியில் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் பொன்பாண்டி தலைமையில் சிஐடியு பாலமுருகன், ஜனநாயக மாதர் சங்க நகரசெயலாளர் ராஜேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் நகராட்சி குடிநீர் ஆதாரங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டும். விருதுநகரை சுற்றி உள்ள ஊராட்சிகளை இணைத்து விருதுநகர் நகராட்சியை விரிவுபடுத்தி சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் நகர் பகுதியில் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கைவிட வேண்டும். ஒப்பந்த பணி முறையை ஒழித்து காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். நகரில் குப்பை, கழிவுநீர் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். பேருந்து நிலைய மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடங்களில் சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post தாமிரபரணி குடிநீர் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamirabarani ,Virudhunagar ,Tamirabarani Nagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...