×

செய்யூர் தாலுகா கொடூர் கிராமத்தில் 99 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

செய்யூர், ஜூன் 28: செய்யூர் தாலுகா கொடூர் கிராமத்தில் ₹45.94 கோடி செலவில் 99 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழில்பேட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவை சுற்றியும் 90க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த பெரும்பாலானோர் கடலில் மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி விசவாயம் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் குறைந்ததால், சிலர் தொழிலை கைவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நீண்ட தூரம் பயணம் மற்றும் அதனால் ஏற்படும் பண விரையத்தால், இப்பகுதி மக்கள் பெரும் மனக்குமருக்குள் உள்ளாகினர். இதனால், தங்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்யும் வகையில், செய்யூர் தொகுதியிலேயே ஏதேனும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையின்படி, இத்தொகுதி மக்களுக்காக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு, சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ‘செய்யூர் பகுதி பின் தங்கிய பகுதியாகும். இங்கு, சிட்கோ தொழில்பேட்டை அமைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கொடூர் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ₹45.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 99 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைவதற்கான தொடக்க விழா மற்றும் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, செய்யூர் தாலுகா கொடூர் கிராமத்தில் ₹45.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சிட்கோ தொழிற்பேட்டை பணியை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியை சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் உள்ளிட்டோர் பார்வையிட்டு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, சிற்றரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், விசிக மாவட்ட செயலாளர் ஆதவன், இடைக்கழி நாடு பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பருவதம், மோகனா கோபிநாத், செல்வகுமார், மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் புண்ணியகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செய்யூர் தாலுகா கொடூர் கிராமத்தில் 99 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CITCO ,park ,Seyyur taluk Kauraik ,Chief Minister ,M.K.Stalin ,Seyyur ,Seyyur taluk Kaurlik ,Seyyur taluk Kaurik village ,Dinakaran ,
× RELATED கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை:...