×

பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று 21வது பட்டமளிப்பு விழா

சேலம், ஜூன் 28: சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழக்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் 12.30 மணிக்கு பெரியார் கலையரங்கில் நடக்கிறது.
விழாவில், பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு 2021-2022ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில், பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளார். மேலும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

விழாவில், முதுமுனைவர் பட்டம் பெறும் 4 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 505 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன், பட்டச் சான்றிதழை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். அத்துடன், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 28 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 28 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் ஆளுநர் வழங்கவுள்ளார்.

இந்த விழாவின் மூலம், சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 53,625 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் பயின்ற 1,076 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 61,724 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று 21வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : 21st convocation ceremony ,Periyar University ,Salem ,Karupur, Salem ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...