×

பதவியில் தொடர தலைவர்களை சந்திக்க மாட்டேன் யார் தலைமையிலும் தேர்தலை சந்திக்க தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: பதவியில் தொடர்வதற்காக மூத்த தலைவர்களை சந்திப்பதை ஒரு இழுக்காக கருதுகிறவன் நான். யார் தலைமையிலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறேன் என டெல்லியில் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மேலிட அழைப்பின் பேரில் கடந்த 25ம்தேதி டெல்லி சென்றார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து, டெல்லியில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் கட்சி தலைமை உள்ளது. கட்சி தலைமையை அடிக்கடி சந்திக்கவில்லை என்றாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். நான் சென்னையில் இருந்து டெல்லி வந்த உடனேயே, தலைவர் பதவி மாற்றமா என்று செய்திகள் வெளியாகிறது. அது எனக்கு தெரியாது. இதுவரைக்கும் பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை நான் சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பிறகு அதை நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவோ காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பது கிடையாது. இதை வெளிப்படையாக சொல்கிறேன்.

நான், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து பேசினேன். ஆனால் அவர்கள் யாரும் என்னிடம் இந்த பணி சம்பந்தமாக, நீடிப்பது சம்பந்தமாக, விலகுவது சம்பந்தமாக பேசவே இல்லை. என்னிடம் அவர்கள் பேசியது எல்லாம், தமிழ்நாடு அரசியல், பாஜ, அதிமுக கட்சிகள் அங்கு என்ன செய்கிறது. இந்த இரு கட்சிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக நமது கூட்டணி என்னென்ன செய்கிறீர்கள். இன்னும் என்னென்ன செய்ய வேண்டும். நமது கூட்டணியை இன்னும் எவ்வாறு வலிமைப்படுத்த வேண்டும். மாநில அரசுக்கு எவ்வாறு துணையாக இருக்க வேண்டும். தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை கூறினார்கள். எனது கருத்துகளை கேட்டார்கள்.

என்னை நீடிக்க சொன்னாலும் மகிழ்ச்சி அல்லது போதுமென்று சொன்னாலும் மகிழ்ச்சி. பதவியில் தொடர்வதற்காக மூத்த தலைவர்களை சந்திப்பதை ஒரு இழுக்காக கருதுகிறவன் நான். வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவது கிடையாது. யார் தலைமையிலும் தேர்தலை சந்திக்க தயார். யார் இருந்தாலும் இணைந்து வேலை செய்வோம். தமிழ்நாட்டில் ஆன்மிக நம்பிக்கை அதிகமாக இருந்தாலும், சனாதன சக்திகளுக்கு அங்கு எப்போதும் இடமில்லை. பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு இடமில்லை. அதனால் அவர்கள் வெற்றி பெற முடியாது. மக்கள் மனதில் அவர்களுக்கு இடமில்லை.

அதிகமான தொகுதிகளை பெறுகிறோம் என்பது முக்கியமில்லை. பெற்றிருக்கிற தொகுதிகளில் வெற்றி பெறுகிறோமா என்பதுதான் முக்கியம். கடந்த 15 ஆண்டு கால தமிழ்நாடு வரலாற்றை பார்த்தால் கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் காங்கிரஸ் 72 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அடிப்படை ராகுல்காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தான். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

* பதவி நீட்டிப்பா…புதிய தலைவரா..? இன்று அறிவிப்பு வெளியாகும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி கடந்த நான்கரை ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், டெல்லி தலைமை அவசர அழைப்பின் காரணமாக கே.எஸ்.அழகிரி கடந்த 25ம்தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசினார். சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்திக்க நேரம் உறுதி செய்யப்படவில்லை என்பதால் நேற்று மாலை சென்னை திரும்பினார். இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக ஏற்கனவே, ராகுல்காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை கே.எஸ்.அழகிரிக்கு பதவி நீட்டிப்பு செய்வதா அல்லது புதிய தலைவரை நியமிப்பதா என்பது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்து விட்டதாகவும் இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post பதவியில் தொடர தலைவர்களை சந்திக்க மாட்டேன் யார் தலைமையிலும் தேர்தலை சந்திக்க தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : KS Azhagiri ,CHENNAI ,K.S.Azhagiri ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...