×

தூய ஆவியாரின் துணை

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(உரோமையர் 8:5-17)

முப்பது வயதில் தொடங்கிய இயேசு கிறிஸ்துவின் பணி கெடுவாய்ப்பாக அவருடைய 33 வயதில் நிறைவுக்கு வந்துவிட்டது. இது இயேசுவின் சீடர்களுக்கும் அவரைப் பின்பற்றிய எண்ணற்ற மக்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதிலிருந்த அவர்கள் எவ்வாறு மீண்டு எழுந்தனர் அதற்கு இயேசுகிறிஸ்து அவர்களை எப்படி ஆயத்தப் படுத்தி இருந்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விசயம் யாதெனில், சுமார் மூன்று ஆண்டுகளே பணியாற்றிய ஒரு இளைஞர் இன்று 2000 ஆண்டுகளைக் கடந்து தாம் வாழ்ந்த பாலஸ்தீனத்தைக் கடந்து தனது யூத இனத்தைக் கடந்து உலகமெங்கும் வணங்கக் கூடிய ஒருவராக இருப்பதை சாதாரண ஒரு விசயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்தவம் கொள்கை அளவில் பல இடங்களில் நீர்த்துப்போயுள்ளது. பாதை மாறியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், இயேசுகிறிஸ்துவும் அவரது கற்பித்தலும் இன்றும் கோடிக் கணக்கான மக்களுக்குப் பொருத்தமுடையதாகவும் வாழ்க்கையை மாற்றியமைப்பதாகவும் உள்ளது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

இயேசுவின் பணி அவர் தொடங்கிய இரண்டே ஆண்டில் அது சமய அதிகாரங்கள் அரசியல் அதிகாரங்களை அசைத்தது என்றால் அவரது பணி எத்தகைய தீவிரத் தன்மை கொண்டது என்பது நமக்குப் புரிகிறது. அது மட்டுமல்ல மாற்றத்திற்காகவும் தங்களுக்கு மீட்பு அளிக்கும் மேசியாவுக்காகவும் ஏங்கி இருந்த மக்கள், இயேசுவிலே அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அவரைப் பின்தொடர்ந்தனர் எழுச்சி பெற்றனர். சமய அதிகாரங்கள் தம்மைக் கொலை செய்ய வழிதேடுவதையும், ஆங்காங்கே தம்மிடம் அவர்கள் முரண்பட்டு நிற்பதையும், இயேசு கண்டு தமக்கு நேரவிருந்த ஆபத்தை உணர்ந்தார். அதை சீடர்களுக்குக் கூறி அவர்களைத் தயார்படுத்தி வந்தார். (மாற்கு 8:31)

இருப்பினும் தவறாக எதையும் இயேசு செய்யவில்லை, ஆயுதமெடுத்துப் போராடத் தூண்டவில்லையாதலால் சீடர்கள் இயேசுவின் உயிருக்கு இருந்த ஆபத்தை முழுமையாக உணரவில்லை. ஒரு கட்டத்தில் இயேசு சீடர்களிடம், ‘‘நான் தந்தையிடம் போகிறேன்’’ (யோவான் 14:12). என்று கூறினார். தமக்குப் பின் சீடர்கள் வெறுமையை உணருவார்கள். நம்பிக்கையிழந்து தளர்ந்து போவார்கள் என்பதை உணர்ந்த வராக, ‘‘உங்களோடு என்றும் இருக்கும்படி துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.

தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்… அவர் உங்களோடு தங்கியிருக்கிறார். உங்களுக்குள்ளும் இருக்கிறார்’’ (யோவான் 14:16-17). என அவர்களைப் பலப்படுத்தினார். இவ்வாறு சீடர்களும் ஆதித்திருச்சபை மக்களும் தூய ஆவியாரின் துணை கொண்டு இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின் ஏற்பட்ட பெரும் வெற்றிடத்தை நிரப்பினார்கள்.

அச்சம் நீங்கி துணிவு பெற்றனர். இயேசுவே ஆண்டவர் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தொடங்கினர். எந்த அச்சுறுத்தலுக்கும், தண்டனைக்கும் அஞ்சாமல் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தனர். (திருத்தூதுவர் பணிகள் 2:36) அவர்களின் மன உறுதி தூய பவுல் அடிகளைப் போன்ற யூத சமயத்தில் வைராக்கியம் கொண்டு இருந்த சிறந்த கல்விமானை இயேசுவிடம் கொண்டு சேர்த்தது. (திருத்தூதுவர் பணிகள் 9:19-20). பவுல் அடிகளும் தூய ஆவியார் செயல்பாடு குறித்து விவரித்துப் பேசியுள்ளார்.

தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் கடவுளின் மக்கள் தூய ஆவியால் இயக்கப்படுகிறார்கள் என்றும் அச்சம் என்பது அவர்கள் வாழ்வில் இல்லை என்றும் உறுதிசெய்கிறார். (உரோமையர் 8: 14-16).

மேலும், அவர் ‘‘தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலே நடக்க முயலுவோம்’’ (கலாத்தியர் 5:25) எனத் தூய ஆவியிடமிருந்து பிரிக்க முடியாத வாழ்வு பற்றியும் கூறியுள்ளார். இவ்வாறு தூய ஆவியார் கிறிஸ்துவை நம்புவோருடன் இருந்து வழி நடத்துகிறார். சீடர்களும் ஆதித் திருச்சபையினரும் தூய ஆவியின் துணைகொண்டு இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்ந்தனர்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post தூய ஆவியாரின் துணை appeared first on Dinakaran.

Tags : Jesus Christ ,
× RELATED பிறருக்கு உதவுவதில் கிறிஸ்துவர்கள்...