×

ஐசிசி தொடருக்காகவே முகமது ஷமிக்கு ஓய்வு: புதிய தகவல்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனுபவமில்லாத இந்திய வேகப்பந்துவீச்சு படைக்கு, சிராஜ் தலைமையேற்க உள்ளார். இந்த நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தானாக முன்வந்து ஓய்வு கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை தொடரும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலககோப்பை தொடரும் நடக்கவுள்ளது.

அதிலும் உலகக்கோப்பைத் தொடர் 2011ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதனால் ஐசிசி தொடர்களுக்கு தயாராகும் வகையில் முகமது ஷமி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டிடம் ஓய்வு வழங்குமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாகவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஷமி சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இந்திய வீரர்கள் பலரும் ஓய்வெடுக்க குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர். ஆனால் முகமது ஷமியோ தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அங்கு தனக்காகவே ஒரு மைதானத்தை உருவாக்கியுள்ள முகமது ஷமி, அங்கேயே மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன் காயமடைந்த போதும் ஷமி அங்கே தான் ஓய்வெடுத்து வந்தார். தற்போது ஐசிசி தொடருக்கான பயிற்சியை விரைவில் அதே இடத்தில் தொடங்க உள்ளார். அதன்பின்னரே என்சிஏ-வுக்கு திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஐசிசி தொடரை வெல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது. இதனால் இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஷமி, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரையே ரசிகர்கள் நம்பி இருக்கிறார்கள். இதனால் நீண்ட நாட்கள் ஓய்வெடுத்த பின் ஷமி, சிராஜ் மற்றும் பும்ராவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post ஐசிசி தொடருக்காகவே முகமது ஷமிக்கு ஓய்வு: புதிய தகவல் appeared first on Dinakaran.

Tags : Mohammad Shami ,ICC series ,Mumbai ,West ,Indies, India ,Mohammed Shami ,ICC ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு