×

குமரி கோயில் நிலங்களை மீட்கும் பணி தீவிரம்; 301 பட்டாக்களில் தனிநபர் பெயர்கள் மாற்றம்

நாகர்கோவில்: குமரியில் முன்பு விவசாய தேவைக்காக கேரளாவில் இருந்து வந்தவர்கள், கோயில் பெயரில் விவசாய நிலங்களை உருவாக்கி விவாசயம் செய்து வந்தனர். பின்னர் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இந்த நிலங்கள் தனியார் பெயர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது. மேலும், கேரள மாநில அரசும், சிறப்பு கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் அளித்தது. இதில் பலர் பட்டா மாறுதல் செய்தாலும், சிலர் செய்யாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் பெயரில் உள்ள நிலங்களை சிலர் தன்னிச்சையாக விற்பனை செய்வது, குத்தகைக்கு விடுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட்டார். இதன்படி குமரியில் தேவசம் போர்டு மற்றும் அறநிலையத்துறை கோயில் நிலங்களை கண்டறிந்து அவற்ைற மீட்க தனித் தாசில்தாராக சஜீத் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கோயில் ஆவணங்களை ஆய்வு செய்து, கோயில் நிலங்களை களஆய்வு செய்து கண்டறிந்து அவற்றை மீட்டு, கற்கள் பதித்தல் மற்றும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளில் சஜித் ஈடுபட்டுள்ளார். இதுவரை 757 ஏக்கர் நிலங்களை அளவிட்டதுடன், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த 80 ஏக்கர் நிலங்களை அவர் தலைமையிலான குழு மீட்டுள்ளது. இதுவரை 708 நிலஅளவை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 ஆயிரம் கல் ேதவை என அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆணையர் தங்கம், இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி ஆகியோர் மூலம் நாகர்கோவில் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யபட்டது. இந்த பரிந்துரையை ஏற்று கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் கடந்த இரு மாதங்கள் முன்பு அதிரடியாக 52 பட்டாக்களில் கோயில் பெயருடன் இருந்த காப்பாளர் பெயரை நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், மீண்டும் 111 பட்டாக்களில் தனி நபர் பெயர்களை நீக்கி கோயில்கள் பெயருக்கு பட்டாவை மாற்றி சேது ராமலிங்கம் உத்தரவிட்டுள்ளார். இதுபோல் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் கெளசிக்கும் 138 பட்டாக்களில் கோயில் பெயர்களில் இருந்த தனிநபர் பெயர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை அறநிலையத்துறை சார்பில் 1,254 பட்டாக்களில் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதில், 301 பட்டாக்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று சிறமடம் பகுதியில் கண்டறியப்பட்ட கோயில் நிலங்களில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post குமரி கோயில் நிலங்களை மீட்கும் பணி தீவிரம்; 301 பட்டாக்களில் தனிநபர் பெயர்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarko ,Kerala ,Kumary ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!