×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏற பக்தர்களுக்கு தடை பதாகை திடீர் அகற்றம்

சிதம்பரம், ஜூன் 27: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை வருவாய்த்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்சவம் நடைபெற்று வரும் வேளையில், கனகசபை மீது பக்தர்களை ஏற்ற வேண்டாம், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற பதாகையை கோயிலில் இருந்து அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறையினர் வலியுறுத்தியதால், தீட்சிதர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தேர் மற்றும் தரிசனம் முடிவுற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சித்சபைக்கு பிரவேசம் செய்தனர். நேற்று மாலை உதவி ஆட்சியர் (பொறுப்பு) பூமா, வட்டாட்சியர் செல்வக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் ஆகியோர் சிதம்பரம் டிஎஸ்பி ரகுபதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கனகசபை படி வாயிலில் இருந்து விளம்பர பதாகையை ஊழியர்கள் மூலம் நேற்று அதிரடியாக அகற்றினர்.

தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணி அளவில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கனகசபையை திறந்து பக்தர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று தீட்சிதர்களிடம் கூறினர். ஆனால் அங்கிருந்த தீட்சிதர்கள் நாங்கள் எங்கள் செயலாளரிடமும், நிர்வாகத்தினரிடமும் பேசி தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறினர். அதைத் தொடர்ந்து போலீசார் நடராஜர் கோயில் செயலாளர் அலுவலகத்திற்கு சென்று பேசினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடராஜர் கோயில் தீட்சிதர்களிடமும், கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏற பக்தர்களுக்கு தடை பதாகை திடீர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple ,Kanakasabha ,Chidambaram ,Dikshitars ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ...