×

விரைவில் புற்றுநோய்க்கு தடுப்பூசி: ஆராய்ச்சியில் முன்னேற்றம்

சியாட்டில்: புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா போன்ற தொற்றுநோய்கள் வேகமாக பரவி விரைவிலேயே உயிரை பறிக்கும். ஆனால் புற்றுநோய் நமது உடலுக்குள்ளே மறைந்திருந்து, மெல்ல மெல்ல உயிரை குடிக்கும். உலகளவில் தொற்றுநோய்களால் இறப்பவர்களை காட்டிலும் புற்றுநோயால் இறப்பவர்களே அதிகம். எனவே தொற்றுநோய்களை தடுப்பூசி கொண்டு தடுப்பதைப் போல புற்றுநோயையும் தடுப்பூசியால் தடுக்க பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கேன்சர் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் தேசிய கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆய்வு குழு தலைவர் டாக்டர் ஜேம்ஸ் கல்லி கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். முன்னெப்போதையும் விட இப்போது நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக, மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து கேன்சர் செல்கள் எவ்வாறு மறைந்து கொள்கின்றன என்பதில் தெளிவு கிடைத்துள்ளது. எனவே நோய் எதிர்ப்பு அமைப்பு இன்னும் வலுப்படுத்துவதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்கலாம். கேன்சர் செல்களை கற்றுத்தர நோய் எதிர்ப்பு மண்டலத்தின் டி செல்களுக்கு கற்றுத் தந்தோமானால், அது உடலின் அனைத்து ரத்த நாளங்கள் வழியே ஊடுருவில கேன்சர் செல்களை அடியோடு அழிக்கும்’’ என்றார். புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் மற்றவை போல நோயை தடுக்கும் வகையில் இருக்காது. மாறாக, புற்றுநோய் கட்டிகளை சுருக்கி, அந்நோய் மீண்டும் தாக்காமல் தடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்போது பல ஆய்வுகள் முன்னேறிய கட்டத்தில் இருப்பதாலும், பல தன்னார்வலர்கள் தைரியாக தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்பதாலும் அடுத்த 5 ஆண்டுகளில் பல புற்றுநோய்களுக்கான தடுப்பூசிகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

The post விரைவில் புற்றுநோய்க்கு தடுப்பூசி: ஆராய்ச்சியில் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Seattle ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!