×

கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் தமிழ்நாட்டில் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி சார்பில் ‘உலக வெண்புள்ளிகள் தினத்தை’ முன்னிட்டு விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: வெண் புள்ளிகள் விழிப்புணர்வு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது. உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் வெண் குஷ்டம் என்ற பெயரை மாற்றி வெண் புள்ளிகள் என்று சொல்ல வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை மேற்கோள் காட்டி அரசாணை வெளியீடு செய்தது. வெண்புள்ளிகள் பாதித்தவர்களை பள்ளிகளில் பாகுபாடு பார்க்க கூடாது என்று ஒரு அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வரும் 2030ம் ஆண்டுக்குள் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையை பார்த்தால் நகைப்பு தான் வருகிறது. ஆஷா பணியாளர்கள் நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒன்றிய அரசின் தேசிய நல வாழ்வு குழுமம் சார்பில் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு முன் வாங்கிய ஊதியத்தை விட ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக ஊக்க தொகை வழங்கப்படுகிறது. ஊக்க தொகை தொற்றா நோய்க்கு உதவினால் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் ரூ.6000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. உதவி பேராசிரியர்களை, இணை பேராசிரியர்களாக்கும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்க உள்ளது. 6ம் தேதி தீர்ப்பு வர உள்ளது.

சில மருத்துவ கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு 36 மருத்துவ கல்லூரிகளும் செயல்பட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் மர்ம காய்ச்சல் குறித்த கேள்விக்கு, இதுவரை எந்த மர்ம காய்ச்சலும் தமிழ்நாட்டில் இல்லை. அப்படியே வந்தாலும் மக்களை பாதுகாப்போம். எல்லை ஓர பகுதிகளில் 13 இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து பகுதியில் தொடர் கண்காணிப்பு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார். டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்.

The post கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் தமிழ்நாட்டில் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Annai Velankanni Women's College ,Saitappettai, Chennai ,World Whiteheads Day ,M.Subramanian ,
× RELATED தமிழ்நாடு – கேரளா எல்லையில்...