×

லால் கிதாப் (எ) சிவப்பு புத்தகம்

* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

வட இந்தியாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரம் தொடர்பான புத்தகமாக “லால் கிதாப்’’ என்ற சிவப்பு புத்தகம், புகழ் பெற்றதாக உள்ளது. இந்த புத்தகம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பண்டிட் ரூப் சந்த் ஜோஷி என்பவரால் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் ஐந்து தொகுதிகள் கொண்ட புத்தகங்களாக 1939 – 1952 ஆண்டுகளுக்கு இடையே வெளிவந்தது. ஜோதிடப் புத்தகங்களில் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் லால் கிதாப் என்றால் அது மிகையில்லை.

இந்த புத்தகம் உருது மற்றும் பஞ்சாப் மொழியை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் பாடல் வடிவிலும் இருக்கிறது. இந்த புத்தத்தை தழுவியே பல ஜோதிடர்களும் பின்பற்றி, அந்த பரிகாரங்கள் யாவும் வெற்றிகரமாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர். பின்னாளில் இந்த புத்தகம் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

பண்டிட் ரூப் சந்த் ஜோஷி

பண்டிட் ரூப் சந்த் ஜோஷி, 1898-ல் பஞ்சாப்பில் பிறந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே தனது தாயை இழந்து பல துன்பங்களுடன் வளர்ந்தார். இவருக்கு பசுவின் முகத்தை உற்று நோக்கி அதன் அம்சத்தை வைத்தே அந்த பசுவின் எஜமானரைப் பற்றிய கணிப்புகளை சொல்லும் திறமை பிறவியிலேயே இருந்தது. இந்த திறமையை இவர் மேலும், சிறிது சிறிதாக விரிவுபடுத்திக் கொண்டே இருந்தார். வானவியல் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். நட்சத்திரங்களை பற்றியும், கோள்களை பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருந்தார். இரவில் இவருக்கு அதிசயமான கனவுகள் வருவதும், அந்த கனவில் இவருக்கு ஒருவர் வந்து வழிமுறைகளை சொல்வதாக அடிக்கடி சொல்வார்.

விழித்ததும் கனவில் கண்டதை குறிப்பெழுதும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். இவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. இவர், பிரிட்டிஷ் அரசாங்க வருவாய் அதிகாரியாக இருந்தார். சில நாட்கள் இவரின் வீட்டில் மக்கள் வாழ்வின் கஷ்டங்களுக்காக விடை தேடி காத்திருப்பார்கள். “ஏன்.. எதற்காக இத்தகைய கூட்டம்?’’ என்று அப்பொழுதிருந்த அரசாங்கம், கேள்வி கேட்குமாம்.

பிரிட்டிஷாரின் அரசாங்கத்தில் பணிபுரிந்ததால் இவர் என்ன செய்கிறார் என்று பலரும் புலனாய்வு செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், இவரின் வீட்டின் அருகில் விடுமுறை நாட்களில் மிகவும் கூட்டமாக இருக்கும். சக மக்களுக்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் பணியாக கொண்டிருந்தார். கைரேகை மற்றும் கால் ரேகைகளை கொண்டு ஒருவரின் எதிர்காலம் மற்றும் இறந்தகால நிகழ்வுகளை துல்லியமாக பலன் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்தக் கலையை இவர் யாரிடமும் பயிலவும் இல்லை, இதற்காக எந்த நூல்களையும் கற்கவில்லை. ஜோதிடம் பார்க்கும் பலருக்கும் கட்டணம் ஏதும் வாங்காமல் வழி சொல்லிக் கொண்டிருந்தார். தினந்தோறும் கனவுகளில் நடக்கும் பலன்களையும், தீர்வுகளையும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பல தீர்வுகளும் பதில்களும் இவரை அறியாமலே வந்ததாக இவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் மயக்க நிலையிலும் பலன்கள் வந்ததாக சொல்வார்கள். பலரும் அவரவர்களின் பிரச்னையை சொல்லி கேட்டுச் சென்று, சிறிது நாட்கள் கழித்து திரும்பி வந்து, காத்திருந்து நன்றி சொல்லி செல்வார்களாம். புகழை விரும்பாதவராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதைகூட தவிர்த்திருக்கிறார்.

தன்னுடைய இறுதி காலத்தில் ஒரு ஊடக நிபுணரின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அந்த ஊடக செய்தி சேகரிப்பாளர் இறுதியாக அடுத்தமுறை வரும்போது இன்னும் என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மறுத்த அவர், இடைமறித்து அடுத்த முறை நாம் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருக்காது. இதுவே நமது கடைசி சந்திப்பாக இருக்கும். ஆகவே, வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும், இப்பொழுதே கேளுங்கள் சொல்கிறேன் எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார். தன் வாழ்நாளின் இறுதிகாலத்தை முன்னரே இவர் உணர்ந்திருக்கிறார்.

லால் கிதாப் புத்தகத்தில் கிரகங்களுக்கான பரிகாரங்கள்

* சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால்

ஓடும் நீரில் செப்பு நாணயத்தை வீசுவது. வீடு கட்டும்ேபாது நுழைவாயிலை கிழக்கில் வைப்பது சாதகமாக இருக்கும்.

* சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால்

திங்கட்கிழமை விரதம். பால், அரிசியை தானம் செய்தல். படுக்கையின் பாதங்களில் வெள்ளி நகைகளை வைப்பது.

* செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால்

செவ்வாய்க்கிழமை விரதமிருத்தல். சிந்தூர் என்ற குங்குமத்தை தானம் செய்தல் அல்லது ஓடும் நீரில் சிந்தூரை வீசுவது.

* புதன் பாதிக்கப்பட்டிருந்தால்

புதன் கிழமை விரதம் மேற்கொள்ளுதல். பச்சை நிற பொருட்களை ஓடும் நீரில் விடுதல். பச்சை நிற ஆடைகளை அல்லது பச்சை நிற வளையல்களை தானம் செய்தல் வேண்டும்.

* வியாழன் பாதிக்கப்பட்டிருந்தால்

மரத்திற்கு நீர் பாய்ச்சுதல். மஞ்சள் நிற பூச்செடிகளை நட்டு வளர்த்தல்.

* சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால்

சலவை செய்த ஆடைகளை அணிவது. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது. வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொள்வது. வழிபாட்டு தலங்களுக்கு தயிர், தூய பசு நெய், கற்பூரம் தானம் கொடுத்தல் ஆகும்.

* சனி பாதிக்கப்பட்டிருந்தால்

சனிக்கிழமை விரதம் மேற்கொள்ளுதல். சனிக்கிழமை எண்ணெய் தானம் செய்யலாம். நாய் மற்றும் காகங்களுக்கு கடுகு எண்ணெய் ரொட்டியை கொடுப்பதும் நல்ல பரிகாரம். பைரவரை வழிபாடு செய்தல்.

* ராகு பாதிக்கப்பட்டிருந்தால்

நோய் ஏற்பட்டிருந்தால், நோயாளியின் எடைக்கு சமமான பார்லி அல்லது கோதுமையை ஓடும் நீரில் விடலாம். துப்புரவு தொழில் செய்வோருக்கு சிவப்பு மசூர் பருப்பு வழங்குதல்.

* கேது பாதிக்கப்பட்டிருந்தால்

விநாயகர் வழிபாடு. வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு நாயை வளர்ப்பது அல்லது அந்த நாய்க்கு உணவளிப்பது. லால் கிதாப் புத்தகத்தில் சொல்லப்பட்ட பரிகாரங்கள் யாவும் தோஷமுடைய கிரகங்களை அடையாளம் கண்டு அவற்றின் தீங்கு விளைவிக்கும் பலன்களை குறைப்பதே ஆகும். இந்த பரிகாரங்கள் யாவும் கடினம் இல்லாமல், யாரும் எளிதாக செய்யும் வண்ணம் உள்ளதே சிறப்பாகும். இவரின் பல பரிகாரங்கள் அனைத்தும் கைரேகையையும் ஜாதகத்தின் பிறந்த ராசிக் கட்டத்தையும் இணைத்தே பலன் சொல்லப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி ராசிகளுக்கான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

The post லால் கிதாப் (எ) சிவப்பு புத்தகம் appeared first on Dinakaran.

Tags : Sivakanesan ,North India ,Dinakaran ,
× RELATED லால்கிதாப் எனும் ஜோதிட சாஸ்திரம்