×

மாவட்டத்தில் 3 இடங்களில் பன்னோக்கு மருத்துவ முகாம்

தர்மபுரி, ஜூன் 25: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தர்மபுரியில் 3 இடங்களில் நடந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, சுகாதாரத்துறை சார்பில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது. பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை, கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழுநோய், தோல் சம்மந்தமான நோய்கள் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் இருதய நோய் நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட சிறப்பியல் மருத்துவர்கள் பங்கேற்று, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, எக்கோ, யுஎஸ்ஜி (ஸ்கேன்), மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான மார்பக, கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், அரசு மருத்துவமனைகளுக்கும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப் படுகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே, மக்கள் தங்களது உடல்நலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், தகுந்த சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்களில் 6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்எல்ஏ, தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜெயந்தி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் பிருந்தா, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பிசிஆர் மனோகரன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, அரசு தலைமை மருத்துமனை மருத்துவர் கனிமொழி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post மாவட்டத்தில் 3 இடங்களில் பன்னோக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Pannoku ,Medical ,Camp ,Dharmapuri ,Karunanidhi Centenary ,Pannoku Special Medical Camp ,Pannoku Medical Camp ,Dinakaran ,
× RELATED புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு...