×

கண்டமங்கலத்தில் வீட்டின் பின்புறம் பதுக்கிய ₹3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கண்டமங்கலம், ஜூன் 25:வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விழுப்புரம் எஸ்பி சசாங்சாய்க்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் மற்றும் தனிப்படை போலீசார் கண்டமங்கலம் பகுதிக்கு விரைந்து சென்று வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 10 சாக்கு முட்டைகள் இருந்தது, அதை பிரித்து பார்த்தபோது 150 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டிலிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்த நசீர்அகமது (34), ஜமாலுதீன் (44) என தெரியவந்தது. அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விழுப்புரம், கண்டமங்கலம் பகுதிகளில் உள்ள கடைகளில் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். இதையடுத்து மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புடைய புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கண்டமங்கலத்தில் வீட்டின் பின்புறம் பதுக்கிய ₹3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kandamangalam ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை