×

கலைஞர் நூற்றாண்டு விழா: இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

விராலிமலை, ஜூன் 25: அன்னவாசல் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் 2236 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துவப் பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதன்படி வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல்நல மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். மேலும், அனைத்து விதமான ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சை பரிந்துரைகள் செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவ வசதிகள் சென்றடையாத பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே மருத்துவ முகாம்கள் நடத்தி நிறைவேற்றி வைப்பதாகும். பல்வேறு விதமான நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படுவது முகாமின் சிறப்பம்சமாகும்.

குழந்தைகள் நலன், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில், கண்ணொளி காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாகவும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 2236 பேருக்கு பொதுசிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மேல்சிகிச்சைக்கு 131 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவப் பெட்டகம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் 200 பேருக்கும், முதல்வர் காப்பீடு திட்ட அட்டை 46 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன், துணை இயக்குநர் ராம்கணேஷ் (சுகாதாரப் பணிகள்), ஒன்றியகுழுத் தலைவர் ராமசாமி, அன்னவாசல் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரன்(தெற்கு), மாரிமுத்து(வடக்கு), ஊராட்சிமன்றத் தலைவர் செண்பகவள்ளி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,Special Medical ,Camp ,Viralimalai ,Annavasal Free Pannoku Special Medical Camp 2236… ,Pannoku ,Special Medical Camp ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி