×

கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு மருத்துவ முகாம்: மதுரை மாநகராட்சி பகுதியில் 2 இடங்களில் நடந்தது

மதுரை, ஜூன் 25: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறைவாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மாநிலம் முழுவதும் 100 இடங்களில் பன்னோக்கு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் 2 மருத்துவ முகாம்களும், ஊரக பகுதிகளில் 4 மருத்துவ முகாம்களும் என மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் 5 மணி வரை நடந்தது. இம்முகாமில் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 33, கேகே நகரிலுள்ள அருள்மலர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மெகா மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரகம், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனைகள், எலும்பியல், பல், மனநலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவங்கள் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இத்துடன் சித்த மருத்துவம், ஆயர்வேத சிகிச்சை ஆலோசனை வழங்கியதுடன், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பதிவும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, சுகாதார குழுத் தலைவர் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர் நல அலுவலர் கோதை, மாமன்ற உறுப்பினர்கள் மாலதி, அந்தோனியம்மாள், நாகநாதன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு மருத்துவ முகாம்: மதுரை மாநகராட்சி பகுதியில் 2 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Artist Century Festival Pannoku ,Medical ,Camp ,Madurai Municipal Area ,Madurai ,Chief Artist ,Tamil ,Nadu ,Artist Century Festival Pannoku Medical Camp ,
× RELATED உத்தரவாதம் தந்து மருத்துவ...