×

மலைக்கோட்டை சம்பவத்தால் அப்செட்டில் இருக்கும் இலை கட்சியின் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியின் மாஜி மந்திரிகள் தந்திரத்தால் மலைக் ேகாட்டையில் மலையாக மக்கள் குவிந்தது எப்படி…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சர்வவல்லமை படைத்தவராக உள்ள சேலம்காரர் அப்செட்டில் இருக்கும் தகவல் பல மாஜி அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம். விசாரித்ததில் சேலம் விஐபி அணி சார்பில் சில தினங்களுக்கு முன்பு மலைக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தங்களது செல்வாக்கை தலைமைக்கு காட்ட வேண்டும் என மலைக்கோட்டை மாவட்ட 2 மாஜி அமைச்சர்கள் முடிவு செய்தனர். இரண்டாவது நோக்கமாக தேனிகாரருக்கு ஷாக் கொடுக்க இந்த கூட்டம் பயன்படும் என்று நினைத்தார்களாம்.

கரன்சியாக இறைத்தார்களாம். இதற்காக 2 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட பொறுப்பாளர்களை நேரில் வரவழைத்து ‘வைட்டமின் ப’ கொடுத்து கூட்டத்துக்கு தொண்டர்கள் பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு போட்டாங்களாம். பின்னர் அவர்கள் ஆட்களை அழைத்துவரும் உள்ளூர் பிரமுகர்களுக்கும் கரன்சிகளை வாரி இறைத்தார்களாம். இதனையடுத்து தொண்டர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தபோது அவர்கள் வேலையை விட்டு தான் ஆர்ப்பாட்டத்துக்கு வரவேண்டி இருக்காம். அந்த நஷ்டத்தை போக்க தலா ரூ500 குவாட்டர் கொடுக்கவேண்டும் என கறாராக சொன்னார்களாம்.

இதனால் பொறுப்பாளர்கள் பிறரிடம் கடன் வாங்கி தொண்டர்கள் கேட்ட கரன்சியை கொடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து கொண்டு போனாங்களாம். ஆனால் அப்போதும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லையாம். இதனால மாஜி அமைச்சர்கள் இரண்டு பேரும் கடும் அப்செட்டாம். உங்கள் மாவட்டத்துல உங்களுக்கு இவ்வளவுதான் செல்வாக்கா… பணம் கொடுத்து கூட அழைத்து வரமுடியவில்லை. அப்புறம் தேர்தலின்போது பணத்தை எப்படி ஓட்டாக மாற்றுவீங்க என்று பொறிந்து தள்ளினார்களாம். இதனால் வேற வழியின்றி மாஜி அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் வேண்டும் என்றே செயற்கை டிராபிக் ஜாம் ஏற்படுத்தினாங்களாம்.

இதனால பொதுக் கூட்டத்துல எங்கே பார்த்தாலும் தலைகளும் வாகனங்களாக இருந்துச்சாம். பணத்தைவிட டிராபிக் ஜாம் தான் கூட்டம் அதிகமாக இருந்ததை காட்டிச்சாம்… இந்த கூட்டத்தை பார்த்த இலை தலைவர்கள் முகத்தில் புன்னகை… பப்ளிக் மத்தியில் கொந்தளிப்பை பார்க்க முடிந்தது… ஆனால் ரிசல்ட் சேலம்காரர் அப்செட்டில் இருக்கிறார் என்பதுதானாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எந்த கட்சியை சேர்ந்த ஐடி பிரிவினரை யாரு கேள்வி கேட்டு துளைத்தெடுத்தா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு தாமரை கட்சியில் வெயிலூர் தொகுதி பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சரான முன்னாள் படை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நியமிக்கப்பட்டது முதலே தொடர்ந்து தொகுதியை சுற்றி சுற்றி வருகிறாராம். வெயிலூரில் நடந்த ஐடி விங் கூட்டத்துல கலந்து கொண்டவர்களிடம் தனித்தனியா அவங்களோட முகநூல் டிவிட்டர் யூ டியூப் என அனைத்தையும் கேட்டு அவர்களை பாலோ செய்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் கேட்டாராம். எல்லோருமே ஓரிரு ஆயிரங்கள்தான்னு சொன்னதும் கொதிச்சுட்டாராம். இன்னும் வேகமா செயல்படணும். நீங்க ஒரு கட்சி சார்புனு தெரியாமலே சமூக வலைதள பக்கங்கள்ல தாமரைக்கு ஆதரவான கொள்கைகளை பரப்பணும்னு உத்தரவே போட்டாராம். அதை கேட்டவங்க எங்க சொந்த காசுல இதை செய்யறோம் அதை பாராட்டாம குறை சொல்றாரு… வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றணும்.

இதையெல்லாம் யார் செய்வா என்று புலம்பியபடி ெசன்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா ஞாபகம் வந்துடுச்சு… அந்த மாவட்ட அரசியலை பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியை சேர்ந்தவர்தான் அல்வா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கார். தற்போது அவர் தான் தேசிய கட்சியின் சட்டமன்ற தலைவராகவும் உள்ளார். ஆனாலும் அவர் இலை கட்சி மீதான பாசத்தை மறக்கவில்லை. நெல்லையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தான் தேசிய கட்சியில் இருக்கிறோம் என்பதையும் மறந்து பழைய ஞாபகத்தில் இலை கட்சியின் நிறுவனரின் பாட்டை வைத்துதான் பிரஸ் மீட்டை தொடங்கினாராம்.

இவர் இலை கட்சி நிறுவனரின் பாட்டை ஆரம்பிக்க அருகில் இருந்த தேசிய கட்சியின் நிர்வாகிகள் வளைந்து நெளிந்தார்களாம். நமது மலையான தலைவர் இலை கட்சியை வறுத்து எடுத்து வருகிறார். ஆனால் துணைத் தலைவர் அந்த கட்சியின் மெட்டு போடுகிறாரே… ஆரம்பமே முரணாக இருக்கிறதே என்று தங்களுக்குள் ேபசிக் கொண்டார்களாம். இலை கட்சியின் தயவு இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும். அதற்காகத் தான் இந்த மெட்டு என்கின்றனர் அல்வா தொகுதி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மலைக்கோட்டை சம்பவத்தால் அப்செட்டில் இருக்கும் இலை கட்சியின் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,the Leaf Party ,VIP ,Maji ,Leaf Party ,Peter ,Abset by the ,Mountains ,Yananda ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!