குமார சஷ்டி
24.6.2023 – சனி
முருகப் பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் உண்டு. அதிலே சஷ்டி விரதம் மிக உயர்வானது. அதிலும், கந்த சஷ்டி விரதம் மிகமிக சிறப்புடையது. இந்த கந்த சஷ்டி விரதத்தை தவிர, வேறு சில சஷ்டி விரதங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் குமார சஷ்டி. ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறை குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.
பக்தர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை முழு ஈடுபாட்டுடன் வழிபட வேண்டும். இறைவனுக்கு சந்தனம், குங்குமம், தூபம், பூ, பழங்கள் என சிறப்பு பிரசாதம் படைக்க வேண்டும். ‘ஸ்கந்த சஷ்டி கவசம்’, ‘சுப்ரமணிய புஜங்கம்’ அல்லது ‘சுப்ரமணிய புராணம்’ ஆகியவற்றைப் பாராயணம் செய்வது, மிகவும் மங்களகரமானது. சில பக்தர்கள் கடுமையான விரதத்தை கடை பிடிக்கின்றனர். அவர்கள் எழுந்தது முதல் மாலையில் முருகன் கோயிலுக்குச் செல்லும் வரை எதையும் சாப்பிடுவதையோ குடிப்பதையோ தவிர்ப்பார்கள். இறைவனை வழிபட்ட பின்னரே விரதம் முடியும்.
முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளும் நடைபெறும். இந்த விரதம் அனைத்து அசுர குணங்களிலிருந்தும் விடுவிக்கும். மனரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் …… கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் …… தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் …… குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் …… பெருமாளே.
இந்தத் திருப்புகழ் ஞான வாழ்வைத் தரும். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும்.
அமர்நீதி நாயனார் குரு பூஜை
24.6.2023 – சனி
அமர்நீதி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார். வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்க்குப் பணிசெய்வதையே, தனது ஆத்மா கடைத்தேறும் வழியாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு உணவு அளித்தல், அவர்கள் விரும்பி அணியும் ஆடை (கீழ்கோவணம்) அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.
இவரை சோதிக்க எண்ணிய இறைவன், சிவனடியாராக வந்தார். ஒரு கோவணத்தை தந்து பாதுகாக்கச் சொன்னார். இவர் புத்தாடைகளே தருவேன் என்றார். ‘‘நீர் தரும் ஆடைகள் எமக்குத் தேவையில்லை. நம்மிடமே மாற்று உடை உண்டு. இதோ இந்தத் தண்டத்தில் கட்டியுள்ள கோவணத்தை உம்மிடம் தருகின்றோம். நீர் இதைப் பாதுகாத்து, நீராடி விட்டு வந்தவுடன் தரவேண்டும்.’’ என்று தண்டில் கட்டி இருந்த ஒரு கோவணத் துணியை அவிழ்த்து, அமர்நீதி நாயனாரிடம் தந்தார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் வைத்தார். சிவனடியாருக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் சிவனடியார் மழையில் நனைந்தவராய் வந்தார்.
‘‘என் உடல் நடுங்குகிறது. விரைவாகச் சென்று எம் கோவணத்தைக் கொண்டு வாரும்’’ என்று கூறினார். உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவணம் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். திரும்பத் திரும்பத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தேடிச் சலிப் படைந்த அமர்நீதி நாயனார், வேறு ஒரு உடை தர, சிவனடியார் சீறிச் சினந்தார். ‘‘அமர்நீதியாரே! நன்றாக இருக்கிறது உங்கள் வணிகம்! அடியார்களுக்கு நல்ல கோவணம் கொடுப்பேன் என்று, உலகை நம்ப வைத்தது, என்னுடைய கோவணத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாயா?’’
சிவனடியாரின் சீற்றம் கண்டு அமர்நீதியார் நடுங்கினார். அவர் சமாதான மடையவில்லை. ‘‘இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்’’ என்று கூறினார். சிவனடியார், ‘‘சரி, இன்னொரு கோவணம் இந்தத் தண்டில் சுற்றி வைத்திருக்கிறேன். இதற்கு இணையான ஒரு கோவணம் உம்மிடம் இருந்தால் தரலாம்’’ என்றார். பெரியதராசு கொண்டு வந்து வைத்தார்.
சிவனடியார் தண்டில் கட்டியிருந்த நனைந்த கோவணத்தை வைத்தார். அமர்நீதியார் தம்மிடம் இருந்த விலை உயர்ந்த அழகான கோவணத்தை அடுத்த தட்டில் வைத்தார். ஆனால் அந்தத் தட்டு இறங்கவே இல்லை. சிவனடியார் சிரித்தார். ‘‘நான்தான் இதற்கு இணையான கோவணமில்லை என்று சொல்கிறேனே’’ என்று கேலி செய்தார். தம்மிடம் இருந்த அத்தனைத் துணிமணிகளையும் வைத்தார். தட்டு இறங்குவதாக இல்லை. தம்மிடமிருந்த ஆபரணங்களையும், வைர வைடூரியங்கள் என எல்லாச் செல்வங்களையும் தராசுத் தட்டில் வைத்தார். தராசு இறங்கிவேயில்லை.
தன்னுடைய மனைவியையும் மகனையும் அந்தத் தராசின் மீது ஏறி நிற்கச் சொல்லி, ‘‘சிவாய நமஹ’’ என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தானும் ஏறி நின்றார். நாயனார் ஏறியவுடன் தராசுத் தட்டு கீழே இறங்கி கோவணத்திற்குச் சமமாக நின்றது. ‘‘ஐயா திருப்திதானே?’’ என்று கேட்டார் அமர்நீதி நாயனார். ‘‘திருப்தி திருப்தி’’ என்று சொல்லிக்கொண்டே மறைந்து போனார் சிவனடியார்.
அடுத்த நொடி அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியார் குருபூஜைநாள் ஆனி பூரம். இன்று.
பானு சப்தமி
25.6.2023 – ஞாயிறு
சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் `பானு சப்தமி’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் (வரும் 25-ஆம் தேதி) தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் சூரியனை வணங்குவதன் மூலமும், விரதம் கடைப்பிடிப்பதன் மூலமும், ஒருவர் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ செய்த ஏழு பிறவி பாவங்களிலிருந்தும் விடுபடலாம். இந்த நாளில் சூரிய உதயத்திற்கு முன் நீராடுவது மிகவும் மங்களகரமானது. அதன் பின், சூரிய பூஜை செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். முற்றத்தில் பொங்கல் வைப்பதும் உண்டு.
இந்த விரதம் அல்லது வழிபாடு நம்மை ஆரோக்கியமாகவும் அனைத்து வகையான நோய்களிலிருந்தும் விடுவிப்பதாகவும் இருக்கும் என்பதால், இது `ஆரோக்ய சப்தமி’ என்றும் அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்ற விரதம். இந்துமதி என்ற பெண் ஒரு சமயம் வசிட்ட முனிவரிடம் மோட்சத்தை அடைவது எப்படி என்று கேட்டாள். அவர் அப்போது சப்தமி அல்லது பானு சப்தமி விரதம் இருப்பது குறித்து விளக்கமாக பதிலளித்தார். இந்துமதி இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தை அடைந்தாள். அவள் சொர்க்கத்தில் அப்சரஸ் ஆக்கப்பட்டாள் என்ற புராணக்கதை இந்த விரதம் குறித்துத் கூறுகிறது.
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி
28.6.2023 – புதன்
ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீசுதர்சன ஜெயந்தி உற்சவமாகக் கொண்டாடப்படும். மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீசுதர்ஸனம் ஆகும். கடன் தொல்லை நீங்க சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறப்பானதாகும். சுதர்சனாரை வழிபடுபவர்களுக்கு எந்த விதமான மந்திர சக்தியாலும் தந்திர சக்தியினாலும் பாதிப்பு ஏற்படாது.
மேலும், சுதர்சன வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது. எந்த விதமான தோஷங்கள் இருந்தாலும் நிவர்த்தி செய்யக் கூடியவர் சுதர்சனர். இன்று அவரை வணங்குங்கள்.
பெரியாழ்வார் திருநட்சத்திரம்
29.6.2023 – புதன்
இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம். ஆஷாட ஏகாதசி நாள். குருவுக்குரிய வியாழக்கிழமை. ஆழ்வார்களிலே பெரியாழ்வார் என்கிற பெயரோடு இருக்கின்ற சிறப்பு இவருக்கே உரியது. இவருடைய வளர்ப்பு மகள்தான் ஆண்டாள் நாச்சியார். கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர். பெருமாளை பல்லாண்டு பாடியவர். கண்ணனை குழந்தையாக மாற்றி, கன்னித் தமிழில் பிள்ளைத் தமிழ் பாடிய பெருமகனார். இவர், ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவர். இவருடைய திருவரசு மதுரை அழகர் கோயில் மலையை ஒட்டி இருக்கிறது. இந்த தினத்தில், பல பெருமாள் கோயில்களிலும் பெரியாழ்வார் அவதாரத் திருநாளை, அவருடைய பாசுரங்கள் பாடிக் கொண்டாடுவார்கள். மதுரை அழகர் கோயிலில், திருமாலடியார் குழாம் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, பெரியாழ்வார் ஜெயந்தியை மகாநாடு போல் நடத்துவார்கள்.
தொகுப்பு: விஷ்ணுபிரியா
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.