மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நவ்தீப் சைனி, முருகேஷ்குமார் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ஜெய்ஸ்வால் யு19 உலக கோப்பையை வென்ற அணியில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி, இராணி கோப்பை உள்ளிட்ட தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக களம் இறங்கி 14 போட்டியில் சதம் உள்பட 625 ரன் விளாசினார். இதையடுத்து டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் தொடரின் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் தற்போது வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்திய அணியில் எனது பெயர் இடம்பெற்ற தகவல் அறிந்ததும் எனது அப்பா அழத்தொடங்கிவிட்டார். நான் இன்னும் என் அம்மாவை சந்திக்கவில்லை. பயிற்சிக்காக வெளியே வந்துவிட்டேன். அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் முடிந்ததை செய்ய முயற்சிப்பேன்.நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் களத்தில் என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
அதற்காக சிறப்பாக தயாராகி வருகிறேன். டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலின் போது ரோகித் ஷர்மா, விராட் கோஹ்லி, ரகானே போன்ற மூத்த வீரர்களுடன் நான் பழகி நிறைய கற்றுக்கொண்டேன். டெஸ்ட்டில் நான் எந்தவரிசையில் பேட் செய்வேன் என தெரியாது. ஆனால் எந்த இடத்தில் இறங்கினாலும் திறமையை வெளிப்படுத்துவேன். நிச்சயமாக அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 21 வருட வாழ்க்கையில் நான் கண்ட கனவு நிறைவேறியுள்ளது. எனது வாழ்க்கையை விடவும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். தொடருக்குத் தயாராவதற்கு ஓரிரு நாட்களில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ஜெய்ஸ்வால் செல்ல உள்ளார்.
The post 21 வருட கனவு நிறைவேறிவிட்டது, என்னால் முடிந்ததை செய்ய முயற்சிப்பேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் உற்சாகம் appeared first on Dinakaran.
