×

அரசு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பால் மஞ்சள் ஏலம் நிறுத்தம்

*விவசாயிகள் திண்டாட்டம்

*கலெக்டரை சந்திக்க முடிவு

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு(டிசிஎம்எஸ்) அரசு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், கிடங்கு வசதியின்றி மஞ்சள் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டரை சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள பரமத்திவேலூர் சாலையில், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம்(டிசிஎம்எஸ்) 1930ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 94 ஆண்டுகளாக சொந்த இடத்தில் இயங்கி வரும் இந்த சங்கம், துவக்கம் முதலே லாபத்தில் இயங்கி வருகிறது.

அகில இந்திய அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக பலமுறை தேர்வு பெற்று, பஞ்சாப் ராவ் தேஷ்முக் விருதை பெற்றுள்ளது. இந்த சங்கம் தனது சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக கொங்கணாபுரம், மல்லசமுத்திரம் ஆகிய இடங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. மேலும், தேவூர் மற்றும் மாமுண்டி, பூலாம்பட்டி, ஜலகண்டாபுரத்தில் சேவை மையங்களை நிறுவி, விவசாய விளை பொருட்கள் விற்பனையை சிறப்பாக செய்து வருகிறது. சுமார் 65,000 விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பருத்தி, மஞ்சள், எள், நிலக்கடலை, கொப்பரை, சூரியகாந்தி விதை மற்றும் மக்காச்சோளம் போன்ற விளை பொருட்களை, நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதுடன், விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்து வருகிறது. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், திருச்செங்கோடு வட்டத்தில் கிராமப் பகுதியில் 757 ரேஷன் கடைகளுக்கும், நகர் புறத்தில் 24 ரேஷன் கடைகளுக்கும் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.

இதுதவிர, தரமான மளிகை பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்கள் பெற்று பயனடைய, திருச்செங்கோட்டில் விரிவுபடுத்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டினை நடத்தி வருகிறது. பொதுமக்கள் வீடு கட்ட தேவையான ஐஎஸ்ஐ தரம் வாய்ந்த இரும்பு கம்பிகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள், காலணிகள் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், ஐஓசி விநியோகஸ்தராக செயல்பட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் இண்டேன் எரிவாயு விநியோகத்தையும் மேற்கொண்டுள்ளது. சங்க வளாகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்து தரமான பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோ காஸ் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. சங்கத்தின் சேவை பணியை அறிந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பான சர்வோ ஆயில் விற்பனைக்கு சேலம் மாவட்ட அங்கீகாரம் பெற்ற விற்பனை முகவராக சங்கத்தை கடந்த 2003 முதல் நியமனம் செய்துள்ளது.

இந்தியாவிலேயே சர்வோ ஆயில் விற்பனைக்காக ஒரு கூட்டுறவு சங்கம் ஸ்டாக்கிஸ்டாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை, சங்கத்தின் தலைமையகம் கொங்கணாபுரம் மற்றும் மல்லசமுத்திரம் கிளைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அம்மா மருந்தகம் மூலம் தரமான மருந்துகள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. தூய்மையான மஞ்சள் தூள், பனங்கருப்பட்டி சேர்த்து பிழிந்து செக்கு நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய், அரிசி வகைகள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை அர்த்தநாரீஸ்வரர் பிராண்ட் என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. 6 வகை நறுமணங்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் குளியல் சோப் தயாரிப்பில் தடம் பதித்துள்ளது.

இவ்வாறு சிறப்பாக நடந்து வரும் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு, தற்போது கிடங்கு வசதி இல்லாத பிரச்னை தலை தூக்கியுள்ளது. பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெறும் மஞ்சள் ஏலம் பிரசித்தம். ஆனால், மஞ்சள் மூட்டைகளை வைக்க கிடங்கு வசதி இல்லாததால், ஏல விற்பனை ரத்து செய்யப்படுவதாக சங்கம் அறிவித்துள்ளதால் மஞ்சள் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்காலிமாக பல இடங்களில் கிடங்குகளை வாடகைக்கு பிடித்து ஏலத்தை நடத்தி வந்தாலும், போதுமானதாக இல்லை. கிடங்குகளை கண்டுபிடித்து வர விவசாயிகள் சிரமப்படுவதோடு, அங்கு அடிப்படை வசதிகளும் இல்லை என்பதாலும், லாரி வாடகை அதிகமானதாலும் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2011 முதல் மஞ்சள் விற்பனையில் இந்த சங்கம் கால் பதித்தது.

நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இந்த மஞ்சளை ஏலம் எடுக்க சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவார்கள்.

கடந்த ஆண்டு இந்த சங்கம் விற்பனை செய்த விவசாய விளை பொருட்களின் மதிப்பு ₹50 கோடி என்றால், மஞ்சள் விற்பனை மட்டுமே ₹35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் சிறப்பாக நடந்து வரும் மஞ்சள் விற்பனைக்கு முட்டுக்கட்டையாக கிடங்கு பிரச்சினை எழுந்துள்ளது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அரசு சங்கத்திற்கென ஒதுக்கிய 5 ஏக்கர் நிலம், திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாதபடி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கிடங்கு வசதியின்றி மஞ்சள் ஏலத்தை நிறுத்தும் நிலைக்கு சங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த சங்கத்திற்காக 2000ம் ஆண்டு கைலாசம்பாளையத்தில் சுமார் 5 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த நிலத்தில் கிடங்கு கட்டினால் வாடகை இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கிடங்குகள் கட்ட வேண்டும்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி, கலெக்டரிடம் முறையிடுவதாக உள்ளோம்,’ என்றனர். அரசு இந்த பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் மட்டுமின்றி தன்னார்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு ஒதுக்கிய நிலம் ஆக்கிரமிப்பால் மஞ்சள் ஏலம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengod ,Agricultural Manufacturers Cooperative Sales Union ,DCMS ,
× RELATED பேரூராட்சி அனுமதியின்றி சிமெண்ட்...