×

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத்தை ஒட்டி ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத்தை ஒட்டி ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கிருஷ்ணகிரி அருகே வாரச்சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். காலை 5 மணிக்கு தொடங்கிய வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதேபோல புதுக்கோட்டையில் இன்று கூடிய வாராந்திர ஆட்டு சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் கொண்டுவரப்பட்டன. பண்டிகை காலம் என்பதால் அவற்றை வாங்க இறைச்சி வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆடுகளின் அளவை பொறுத்து ஒரு ஆடு ரூ.1,000 முதல் ரூ.20,000 வரை விலை போகின. பலரும் ஆடுகளை போட்டி போட்டுகொண்டு வாங்கியதால் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வாரச் சந்தையிலும் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. அதிகாலை 2 மணிக்கே தொடங்கிய இந்த வாரச்சந்தையில் கொழுத்த ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வேப்பூர், சேப்பாக்கம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடு கொடியாடு, செம்மறி ஆடுகள் என பல்லாயிரம் ஆடுகள் கொண்டுவரப்பட்டன.

இதனை வாங்குவதற்காக திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர். பண்டிகை காலம் என்பதால் விலை சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதால் இன்று ஒருநாள் ரூ. 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையிலும் ஆடுகள் விற்பனை களைகட்டியது. வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 3 மணிக்கே பெரும்பாலான ஆடுகள் விற்று தீர்த்தத்தால் காலை சந்தைக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆடுகளின் விளையும் அதிகரித்து காணப்பட்டது.

The post கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத்தை ஒட்டி ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Kuntarappalli Varachanda ,Krishnagiri ,Bakreet ,Guntarappalli Varachanda ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்