×

இ-சைக்கிள் அறிமுகம்

சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் சுற்றி வர இ-சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு ₹50 கட்டணம் நிர்ணயித்து, வழங்கி வருகின்றனர். சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியியல் பூங்கா உள்ளது. புள்ளிமான், கடமான், முதலை, குரங்கு, மலைப்பாம்பு, வெள்ளை மயில், வண்ணப்பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பூங்காவிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்துச் செல்கின்றனர். ஏற்காட்டிற்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் இப்பூங்காவிற்கு வந்து விலங்குகளை பார்க்கின்றனர். இந்த உயிரியியல் பூங்காவை இரண்டாம் நிலை பூங்காவாக தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதில், பூங்காவை விரிவுப்படுத்தி சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வந்து பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தற்போது பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகள் சுற்றி வரவும், ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாட ஏதுவாக, பல்வேறு சாதனங்களுடன் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிதாக 10 இ-சைக்கிள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் ₹4 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள இந்த சைக்கிளில் சுற்றுலா பயணிகள், பூங்காவை சுற்றி வந்து பார்வையிடலாம். புள்ளிமான், கடமான் உள்ளிட்டவை உள்ள பகுதிகளுக்கு இ-சைக்கிளில் சென்று, அதனை பார்க்கலாம். மின்சார பேட்டரியில் இயங்கும் இந்த சைக்கிளை பெடல் மூலமாகவும் மிதித்துச் செல்லலாம். ஒரு மணி நேரத்திற்கு ₹50 என்றும், அரை மணி நேரத்திற்கு ₹30 என்றும் கட்டணம் நிர்ணயித்து, வனத்துறை வழங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருப்பதால், அந்நாட்களில் அரை மணி நேரத்திற்கு மட்டும் கொடுக்கின்றனர். காரணம், அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இ-சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அத்தகைய வழிமுறையை வனத்துறை அதிகாரிகள் பின்பற்றியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், பூங்கா வளாகத்தில் வனச்சரகர் உமாபதி தலைமையில் வனவர்கள், பூங்கா ஊழியர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

The post இ-சைக்கிள் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kurumbapatti Zoo ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை