×

புதுவையில் வெடிகுண்டு வீசி லாரி டிரைவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, ஜூன் 23: புதுச்சேரி முதலியார்பேட்டையில் லாரி டிரைவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர், தியாகு முதலியார் வீதியில் வசிப்பவர் ராஜி (32), லாரி டிரைவர். குடும்ப பிரச்னையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்தார். தேங்காய்திட்டில் இவரது உறவினர் ஒருவர் இறந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கும் பிரச்னையில் இருவரை ராஜி தாக்கி அவமானப்படுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்றபோது, தாங்களே சமரசம் செய்து கொள்வதாக கூறியதால் போலீசார் கலைந்து சென்றனர்.

பின்னர் இறுதி சடங்கு முடிந்த நிலையில் வீடு திரும்பிய ராஜி குளித்துவிட்டு டிபன் வாங்க வெளியே சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த 2 பேர் திடீரென ராஜி முதுகில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜி உடலை மீட்டு கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல்துறை விசாரணையில் இறங்கியது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனிடையே தெற்கு எஸ்.பி. ரவிக்குமார் மேற்பார்வையில் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் வேல்ராம்பேட் நிர்மல், உழந்தை கீரப்பாளையம் ஹரி ஆகியோர் ராஜியுடன் இறுதிச்சடங்கின் போது மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராஜியின் அண்ணன் மூர்த்தி (39) என்பவரிடம் புகாரை பெற்ற போலீசார் 2 தனிப்படையை அமைத்து கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான நிர்மல், ஹரி மற்றும் வெடிகுண்டு தயாரிக்க உதவிய லோக பிரகாஷ், மோகன் ஆகிய 4 பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மீதியுள்ள 4 பேரும் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே கொலையுண்ட டிரைவர் ராஜியின் உடல் கதிர்காமத்தில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில் தியாகுமுதலியார் நகரில் எஸ்ஐ அன்பழகன் தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

The post புதுவையில் வெடிகுண்டு வீசி லாரி டிரைவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Puducherry Mudaliarpet ,
× RELATED நமச்சிவாயம் தோல்வி எதிரொலி:...