×

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதா? 96 மணி நேரம் தேடியும் பயனில்லை

போஸ்டன்: டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர்.

ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கியை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை ஈடுபட்டது. நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடாவின் கடற்படையின் பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது. நேற்று காலை கூடுதல் சத்தம் கேட்டதாகவும் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
நேற்று 4 வது நாள் ஆன நிலையில் ஏராளமான கப்பல்கள் மற்றும் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. 7600 சதுர மைல்கள் வரை கப்பல்கள், விமானங்கள் தேடின.

96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் நீர் மூழ்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையுடன் ஆக்சிஜன் தீரும் நிலையை எட்டியது. 3,800 மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்மூழ்கியில் இருப்பவர்களை உயிருடன் மீட்பதற்கான இறுதி கட்ட மீட்பு பணிகள் நடந்தன. அப்போது டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. இவை சாகச பயணத்திற்கான நீர்மூழ்கிகப்பல் பாகங்களாக இருக்கலாம் என்றும், வெடித்து சிதறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சாகச பயணம்சென்றவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது.

The post டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதா? 96 மணி நேரம் தேடியும் பயனில்லை appeared first on Dinakaran.

Tags : Boston ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...