×

கலை மற்றும் அறிவியல், பிஎட் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிஎட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி-1ல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரையில், தற்காலிக அடிப்படையில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு நியமித்து வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் கல்வி ஆண்டுக்கு சுழற்சி-1ல் ஏற்கெனவே ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 4,318 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒப்பளிக்கப்பட்ட 1,381 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களையும் சேர்த்து, ஏப்ரல் 2023 மற்றும் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 முடிய 11 மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணை வழங்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரையில் அல்லது கல்வி ஆண்டின் இறுதிநாள் வரையில் தற்காலிகமாக சுழற்சி-1ல் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி அளித்தும், நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இதன்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம், பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுப்பு ஊதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களின் பணிக்காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும்பட்சத்தில் அந்த பணியிடத்தை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்ப வேண்டும். ஆசிரியர் மாணாக்கர் விகிதாச்சாரம் 1:30 என்ற அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

The post கலை மற்றும் அறிவியல், பிஎட் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...