×

ஆவடியில் சோகம் ஓசிஎப் ஊழியர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஓசிஎப் ஊழியர் ரத்த வாந்தி எடுத்து, மர்மமான நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆவடி, பக்தவச்சலம் நகர், 1வது தெருவில் வசித்தவர் லட்சுமிகாந்தன் (56). ஒன்றிய அரசின் ராணுவ படைகலப் பிரிவு (ஓசிஎப்) தொழிற்சாலை கேன்டீனில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. எனினும், தன்னுடன் வேலை செய்யும் ஜெயசித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரது வீட்டிலேயே சில ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார். இதில், ஜெயசித்ராவுக்கு ஏற்கெனவே முதல் கணவர் மூலமாக ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு லட்சுமிகாந்தன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு லட்சுமிகாந்தனுக்கும் ஜெயசித்ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதனால் மீண்டும் வாடகை வீட்டில் லட்சுமிகாந்தன் தனியே வசித்து வந்துள்ளார். அதன்பிறகு, அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்ற வாலிபரை வளர்ப்பு மகனாக லட்சுமிகாந்தன் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 20ம் தேதி வேலைக்கு சென்ற லட்சுமிகாந்தன், அங்கு மதியத்துக்கு மேல் உடல்நலம் சரியில்லை எனக் கூறி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், லட்சுமிகாந்தனை நேற்றுமுன்தினம் இரவு வளர்ப்பு மகன் ஜான்சன் வந்து பார்த்துள்ளார்.

அப்போது, லட்சுமிகாந்தன் ரத்த வாந்தி எடுத்து மர்மமான நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். இதில் மருத்துவர் பரிசோதனை செய்து இறந்து விட்டதாக தெரிவித்தார். உடனே, இதை அறிந்த ஜான்சன் ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்று விட்டான். ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், தலைமறைவான ஜான்சனை தேடுவதுடன், லட்சுமிகாந்தனின் மர்ம மரணம் குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆவடியில் சோகம் ஓசிஎப் ஊழியர் மர்ம சாவு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Avadi ,OCF ,Aavadi ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்