×

குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்த கோயில் நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா ஆக்கிரமித்த கோயில் நிலங்கள் சட்டப்பூர்வமாக மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். பூந்தமல்லி அருகே பழஞ்சூர், பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் எனும் தனியார் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது. முன்னதாக, இதுகுறித்து கடந்த 2013ம் ஆண்டு குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், தங்களது பூங்கா உள்ள இடத்தில் 21 ஏக்கர் கோயில் நிலம் என்று கூறி, ஆக்கிரமிப்பு இடத்துக்கான குத்தகை தொகையை வழங்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 1995ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விட்டதாகவும்,  அதன்பிறகு கோயில் பெயரில் இருந்த பட்டாவை வருவாய்த்துறையினர் ரத்து செய்ததால், இந்த கோயில் நிலங்களை குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 1998ம் ஆண்டே குத்தகை காலம் முடிந்த நிலையில், கோயில் நிலத்தை அத்துமீறி குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் ஆக்கிரமித்திருப்பதாக வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ள கோயில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும். மேலும், வருவாய்த்துறைக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 ரூபாயும், கோயிலுக்கு ரூ.9.5 கோடி ரூபாயை குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், பூந்தமல்லி அருகே காசி விஸ்வநாதர் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில் மற்றும் குளங்கள், கோயிலுக்கு சொந்தமான இடங்களை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.பின்னர்  அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அக்காலத்தில் ஜமீன்தார்களாக வாழ்ந்தவர்கள், இக்கோயில்களுக்கு பூஜைகள், வழிபாட்டு முறைகள் மேற்கொள்ள 177 ஏக்கர் இடத்தை 1884ம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளனர். அதை நானும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரனும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.  இந்த கோயில் நிலங்களை மீட்க, வருவாய் துறையுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். ஆனால், இந்த 2 கோயில்களில் சாமி தரிசனம் செய்த பிறகு மனம் கனமாகிவிட்டது. இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த 2 கோயில் குளங்கள் ஊராட்சி வசம் உள்ளது. அதை மீட்டு சீரமைக்கப்படும். இங்கு 2 சத்திரங்கள் உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் இன்றே அறநிலையத்துறை இறங்கும். வருவாய் குறைவாக உள்ள கோயில்கள், வருவாய் அதிகம் உள்ள கோயில்களோடு இணைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறை பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ள அர்ச்சகர்கள் வாழ்வில் முதல்வர் ஒளி ஏற்றுவார். இந்த கோயிலுக்குரிய மீட்கப்பட்ட இடம் அதோடு ஒட்டி உள்ள இடம் 177 ஏக்கர் முதல் கட்டமாக வழக்கு இருந்தாலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் தரப்பில் இருந்தும் விளக்கம் தந்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அந்த நிலத்தை தமிழக அரசு மீட்கும் பணியை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அப்போது, மண்டல இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா, செயல் அலுவலர் சரவணன், மேலாளர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட், கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்….

The post குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்த கோயில் நிலங்கள் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Queensland ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Queensland Recreation Park ,Poontamalli… ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...