×

தூய ஆவியாரின் துணை

(யோவான் 14:16-18)

இயேசுவின் ஆற்றல்மிகு தலைமைத்துவம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இருந்த தலைமைத்துவ ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், ஒரு முப்பது வயது யூத இளைஞரால் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்தது? திட்டமிட முடிந்தது? திட்டமிட்டவற்றை செயல்படுத்த முடிந்தது? என எண்ணத் தோன்றுகிறது.

இயேசுகிறிஸ்து யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது “கடவுளின் ஆவி புறா இறங்குவது போலத் தம் மீது வருவதை அவர் கண்டார்’’ (மத்தேயு 3:16). பின்னர் முழுக்கு முனிவர் யோவான் கைது செய்யப்பட்டதைக் கேள்வியுற்று கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் (மத்தேயு 4:12). ஏசாயா தீர்க்கர் முன்னுரைத்தது நிறைவேறும் விதமாக யூத மக்களாளே புற இனத்தவர் வாழும் கலிலேயா என முத்திரை குத்தப்பட்டும், ஏழ்மையும் அறியாமையும் மிகுந்தும், இருந்து சுரண்டலுக்கும் அரசு வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்த கலிலேயாப் பகுதியை திருப்பணியில் முன்னுரிமை அளித்துத் தம் பணியைத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட மக்களுக்கு முதலில் செய்ய வேண்டியது என்ன எனும் தெளிவு அவருக்கு இருந்தது. அவர்களுக்கு நம்பிக்கை அளித்தல், பார்வைத் தெளிவு அளித்தல், துணிவடையச் செய்தல், களம் இறங்கிச் செயல்பட வைத்தல் எனும் பணியைச் செய்தார். ‘‘மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது’’ (மத்தேயு 4:17), என்று வந்து கொண்டிருக்கும் கடவுள் அரசு பற்றிய நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தினார்.

அவர்களின் அறியாமையை நீக்கும் வகையில் அவர்களுக்குக் கல்வி புகட்டினார். காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வந்த தவறான கருத்துக்களை விலக்கி புரட்சிகரமான புதிய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்தார். அதற்கு அவரது மலைப்பொழிவே சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். அவர் கற்பித்தலில் பெண்விடுதலைச் சிந்தனைகள் மையமாக இடம் பெற்றிருந்தது.

அதுவும் அதைத் தமது பணியின் தொடக்கத்திலேயே செய்தார் என்பது சிறப்பு. விபச்சாரம் என்றால் பெண்கள்தான் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். அவமானத்தையும் தண்டனையையும் அனுபவிக்கின்றனர். இயேசு தமது மலைப்பொழிவில் ‘‘விபச்சாரம் செய்யாதே எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று’’ (மத்தேயு 5:27-28) என்று விபச்சாரத்தில் ஆண்களின் பங்கைக் குறிப்பிட்டு விமர்சித்தார். அவ்வாறே மணவிலக்கு என்பதும் ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்ததை விமர்சித்து, மணவாழ்வில் பெண்களுக்கானப் பாதுகாப்பை உறுதிசெய்தார். ஆண்களின் விருப்பப்படியெல்லாம் பெண்களை நடத்தக்கூடாது என்று கண்டித்தார்.

பெண்கள் நலன், பெண்கள் விடுதலை, ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டுதல் இயேசுவின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் நிலைத்தத் தன்மையுடையதாயிருந்தது. இயேசுவின் காலத்து மக்கள், சமய அதிகாரங்கள் மற்றும் அரசு அதிகாரங்களுக்கு அஞ்சி இருந்தார்கள். அவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள்.

இயேசுகிறிஸ்து தவறான அதிகாரங்களை எதிர்க்கவும் அவற்றிற்கு தங்களின் கீழ்ப்படியாமையைத் தெரிவிக்கவும், மீறுதலை வெளிப்படுத்தவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். குறிப்பாகத் தூய்மை – தீட்டு கொள்கை ஏழைகளையும் பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதை மீறுவதற்குப் பயிற்சி அளித்தார். மீறுபவர்களின் சார்பில் நின்று பேசினார்.

இப்படித் தவறான அதிகாரங்களை மாற்ற வேண்டும் என்றால் தனிநபர்களின் செயல்பாடுகள் பெரும் பயனை விளைவிக்காது என்று மக்களை அமைப்பாக்கினார். இறையரசு இயக்கத்தை ஏற்படுத்தி அதில் மக்கள் பெருவாரியாகச் சேர உற்சாகப்படுத்தினார். இவ்வேலையை முறையாகச் செய்ய சீடர் அமைப்பை ஏற்படுத்தி அவர்களை எல்லாக் கிராமங்களுக்கும் அனுப்பினார்.

இதன் மூலமாக கலிலேயா முழுவதிலும் மக்கள் விழிப்படைந்தனர். இயேசுவின் பேச்சைக் கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் கூடினர். இதனால் சமய அரசியல் அதிகாரங்கள் நெருக்கடிக்கு ஆளாயின. இயேசுவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். இயேசுவும் தமக்கு நடக்க உள்ள கொடூர மரணம் குறித்து விழிப்புடையவரானார். அப்படிப்பட்ட ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்தினார்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post தூய ஆவியாரின் துணை appeared first on Dinakaran.

Tags : Jesus ,Lord ,Jesus Christ ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்