×

காமயகவுண்டன்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி

கம்பம், ஜூன் 21: உலக யோகா தினத்தை முன்னிட்டு, காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு யோகா முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு எளிய, இயல்பான சுகப்பிரசவத்திற்கான உட்கடாசனம், தடாசனம், அர்த்த சக்கராசனம், அர்த்தகடி சக்கராசனம், ஏகபாத ஆசனம், வஜ்ராசனம், பத்மாசனம், கோனுகாசனம், பத்மசக்ராசனம் போன்ற யோகா பயிற்சிகளை சித்தமருத்தவ அலுவலர் டாக்டர் சிராஜ்தீன் கற்றுக்கொடுத்தார்.

முகாமில் சுற்றுவட்டார பகுதி கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். மருத்துவ அலுவலர் டாக்டர் சகாய ஜான்சி ராணி, டாக்டர் கார்த்திக், தொற்றாநோய் பிரிவு செவிலியர்கள் ஜமீமா, மரிய இலக்கியா, ஜோசபின் ஆர்த்தி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து டாக்டர் சிராஜ்தீன் கூறுகையில், ‘‘யோகா பயிற்சியினால் உடல் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பதட்ட நேரங்களில் சுரக்கும் குளுகோ கார்டிகாய்டுகள் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

மன அமைதியை ஏற்படுத்தும் மெலடோனின், செரடோனின் ஹார்மோன்கள் சுரக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் யோகா செய்வதன் மூலம் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது, தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது. பொதுவாக கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்துவரவேண்டும். யோகா தொடர்ந்து செய்து வந்தால் மன கவலை, மன அழுத்தம் குறையும்’’ என்றார்.

The post காமயகவுண்டன்பட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kamayakauntanpatti ,Kampam ,World Yoga Day ,Kamayakaundanpatti Government Primary Health Center ,Kamayakaundanpatti ,
× RELATED கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது